இந்த வாரம் கைது செய்யப்படுகிறார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன
சிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த புதன்கிழமை கோட்டே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, அவரைக் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தின் நான்கு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு இணையாத பதவியில் இருக்கும், அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்ய உத்தரவிடப்பட்ட பின்னரும், அவர் வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதிகளைச் சந்திக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்று முன்னாள் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்தவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்க நாட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார். இதனால் கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேபாளத்தில் இருந்து நாடு திரும்பியதும், அட்மிரல் விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்வதை அரச உயர்மட்டத்தில் உள்ள ஒருவர் தடுத்து வைத்திருப்பதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.
நாளையுடன் அட்மிரல் விஜேகுணரத்னவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. கௌரவமாக அவரை வழியனுப்பி வைத்த பின்னர், அவர் கைது செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு அட்மிரல் விஜேகுணரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவத்தில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அரசியல் தலையீடுகளால் அவர் காப்பாற்றப்பட்டார்.
அத்துடன், அதற்குப் பின்னரே சிறிலங்கா அதிபரால் அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.