மேலும்

திருச்சி, சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவை – டிசம்பருக்குள் ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த முக்கிய பேச்சு இடம்பெற்றது.

இந்தப் பேச்சுக்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிறிலங்கா படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,

“ பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விரிவுபடுத்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

இதற்கமைய, பலாலி விமான நிலையம் தொடர்பாக ஆராய்வதற்கு, இந்திய நிபுணர் குழுவொன்று, உடனடியாக வரவுள்ளது,

இந்திய நிபுணர் குழுவுடன் சிறிலங்கா சிவில் விமானசேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவர்.

பலாலி விமான நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலேயே, முழுமையான விரிவாக்கப் பணிகள் இடம்பெறவுள்ளன.

விரிவாக்கப் பணிகளுக்கு முன்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது அனைத்துலக விமானத்தை, பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அனைத்துலக விமானங்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படும்

இந்திய விமானச் சேவையை, உடனடியாக ஆரம்பிப்பதே திட்டம். இது, இந்த ஆண்டு இறுதிக்குள் சாத்தியமாகும்.

இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் இடம்பெறும்.

இந்த விமான நிலைய விரிவாக்கத்தின் ஊடாக, பலருக்கான தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவதன் அவசியம் பற்றி, இந்திய அரசாங்கம் அடிக்கடி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான நகர்வுகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர்.

திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிய வருவதாகவும்,  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *