மேலும்

புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா குத்துக்கரணம்

விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த தொலைபேசி உரையாடலை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டார்.

ரஞ்சன்  –  விடுதலைப் புலிகள் பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள்?

விஜயகலா – யார் கூறியது?

ரஞ்சன்   – ஏன், நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தான் எல்லா நாளிதழ்களிலும் உள்ளன.

விஜயகலா – ஐயோ, யார் அந்தப் பொய்யைச் சொன்னது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி இருந்தோம் என்றே நான் கூறினேன்.

ரஞ்சன் – பாடசாலைச் சிறுமி உறவினர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரா?

விஜயகலா – சகோதரனுக்கும், மாமாவுக்கு எந்த தொடர்புமில்லை. அது போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தெற்கைப் போல, இங்கு உறவு முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ரஞ்சன் – காணிகளைத் திரும்பக் கொடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருந்தீர்கள்.

விஜயகலா – அவர் தனது கட்சியை வளர்க்கவே யாழ்ப்பாணம் வந்தார். அவரது வெற்றிக்கு நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

தேர்தலில் தான் ஒரு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மகிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருந்தார். ஒரு பில்லியன் ரூபா பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக எனக்குக் கூறினார். ஆனாலும் அவரை ஆதரிக்கவில்லை.

ரஞ்சன் – உங்களின் கணவன் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டாரா?

விஜயகலா – இல்லை. என்ன முட்டாள்தனம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சந்திரிகாவும் மகிந்தவும் தான் காரணம்.

ரஞ்சன் – இந்தப் பிரச்சினைக்கான உங்களின் தீர்வு தவறானது.

விஜயகலா – விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்தக் காலத்தில் நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம். உற்சாகத்தில், நான் தவறுதலாக கூறி விட்டேன் . யாரும் திரும்பி வரமாட்டார்கள்.

ரஞ்சன் – விடுதலைப் புலிகள் திரும்பி வரவேண்டும் என்று கூறாதீர்கள். அது நல்லதல்ல.

விஜயகலா – இல்லை, இல்லை ரஞ்சன், இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கான ஊடகங்களின் வேலை.

ரஞ்சன்  – அப்படியான அறிக்கைகளை வெளியிட வேண்டாம். அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

விஜயகலா – இல்லை, ரஞ்சன் விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *