மேலும்

புலிகளின் கை ஓங்க வேண்டும் – சிறிலங்கா அமைச்சர்கள் முன் விஜயகலா உரை

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, சிறிலங்கா அரச அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“2009இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்.

நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்.

நாங்கள், தலையால் நடந்து, சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்தோம். ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எமது மக்களைக் காப்பாற்றாமல் அவர் தனது கட்சியை வளர்க்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எமக்காக எதையும் செய்யவில்லை. “ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா அமைச்சர்கள் திலக் மாரப்பன, வஜிர அபேவர்த்தன போன்றவர்களின் முன்பாகவே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

அவர் விடுதலைப் புலிகள் தொடர்பாக உரையாற்றிய போது, நிகழ்வில் பங்கேற்றிருந்த, அரச அதிகாரிகள் பெரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *