மேலும்

இரண்டு மாதங்களில் அமெரிக்க குடியுரிமையை துறக்க முடியும் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனை இரண்டு மாதங்களில் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று விசாரணைக்காக முன்னிலையாகியிருந்த கோத்தாபய ராஜபக்ச, 3 மணி நேர விசாரணைகளின் முடிவில் வெளியே வந்தார்.

அவரிடம் செய்தியாளர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை துறப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், “ இது தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுபற்றி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதையும் என்னிடம் கூறவில்லை.

அமெரிக்க குடியுரிமையைத் துறக்க வேண்டிய சூழல் நிலை ஏற்பட்டால், அதனை இரண்டு மாதங்களுக்குள் செய்ய முடியும்” என்று பதிலளித்தார்.

அதேவேளை, “வண. வென்டருவே உபாலி தேரர், தனிப்பட்ட முறையில் வழங்கிய அனுசாசன உரைக்கு, சிறிலங்கா அதிபர், பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் எதற்காக இந்தளவு ஆர்வம் கொண்டுள்ளனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தப் பிரசங்கத்தின் சூழலைப் புரிந்து கொள்ளாதவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு சாதாரண நபராகவே இருக்கிறேன், முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் அல்ல.

என் வீட்டில் எனக்கு தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அனுசாசனத்தைப் பற்றிய பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு காரணம் எனக்கு தெரியவில்லை.

அனுநாயக்கருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *