மேலும்

மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை

காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HIND-M என்ற பெயருடைய இந்தக் கப்பல் பழுதடைந்த நிலையில், மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுமார் ஒரு ஆண்டாக கைவிடப்பட்டிருந்த இந்தக் கப்பலின் இயந்திரப் பகுதி, இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இது நாசேவேலையாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.

கப்பலில் பற்றிய தீயை அணைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையிடம் உதவி கோரப்பட்ட போதும், அங்கிருந்த கருவிகள் அனைத்தும்,  சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டதால். உடனடியாக கப்பலில் உள்ள தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இயந்திரப் பகுதியில் பற்றிய தீ மோசமாக எரிந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் எண்ணெய்த் தாங்கியிலும் தீ பரவத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கப்பல் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதாகவும், கூறப்படுகிறது.

தீப்பிடித்து எரியும் கப்பல், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சொந்தமானது என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *