மேலும்

மஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு?

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து மத விவகார பிரதி அமைச்சராக, காதர் மஸ்தான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கு கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைக் கடுமையாக சாடியிருந்தார்.

அத்துடன், இந்த நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பதாக,  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கூறியிருந்தார்.

இதனிடையே, சைவ சமய அமைப்புகள் பலவும், இந்த நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

நேற்று நல்லூரில் சைம சமய அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சரான, டி.எம்.சுவாமிநாதன், சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

“ஒரு அமைச்சர் என்ற வகையில், இந்த நியமனத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

சிறிலங்கா அதிபரே, பிரதி அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இந்த விடயத்தை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.

இந்த நியமனம் தொடர்பாக உடனடியாக சாதகமான பதில் அளிக்கப்படுடும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் எனக்குத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மஸ்தானை பிரதி அமைச்சராக நியமிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அவருடன் கூட்டாக அமைச்சின் பணிகளை நிறைவேற்ற முடியும்” என்றும் அமைச்சர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *