மேலும்

64.8 பில்லியன் ரூபாவுக்கு உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படை 64.8 பில்லியன் ரூபாவுக்கு, பல்வேறு வகையான உலங்குவானூர்திகளையும், ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதற்காக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவை விரைவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எயர் வைஸ் மார்ஷல் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதை அடுத்து, முன்னர் இருந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பணிகள் செயலிழந்தன.

ரஷ்யாவிடம் இருந்து பத்து Mi 171 SH உலங்குவானூர்திகளைக்   கொள்வனவு செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ள இதில் பிரதானமானது. இவை போக்குவரத்து மற்றும் போர்த் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடியவை.

இதற்காக, 2015இல் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்ட 300 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்த முடியும்.

இந்த கடன் திட்டத்தின் கீழ் சிறிலங்கா கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 போர்க்கப்பலை வாங்க திட்டமிடப்பட்டது.  எனினும், இந்தியாவிடம் இருந்து வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை விட இது விலை அதிகம் என்பதால், இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா விமானப்படை நான்கு  Mi 17 உலங்குவானூர்திகளைக் 14.3 பில்லியன் ரூபாவுக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு இவை தேவையாக உள்ளன.

ஐ.நா சட்டவிதிகளின் கீழ் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தமது சொந்தத் தளபாடங்களையே பயன்படுத்த வேண்டும். இந்த முதலீட்டை மீட்க நீண்டகாலம் செல்லும்.

இதைவிட, சிறிலங்கா விமானப்படை நான்கு ஆளில்லா வேவு விமானங்களை 6.2 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யவுள்ளது.

மேலும் ஆறு பயிற்சி உலங்குவானூர்திகளை 4.87 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டமும் உள்ளது.

மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, 11.48 பில்லியன் ரூபாவுக்கு  இரண்டு பெல் 414 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட இரண்டு பெல் 206 பி ஜெட் ரேஞ்சர் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் திட்டமும் விமானப்படையிடம் உள்ளது.

பெல் உலங்குவானூர்திகளின் கொள்வனவுகள் அனைத்தையும் சிங்கப்பூரில் உள்ள தரகர் மூலமே மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த தரகரே, வெளிநாட்டுக் கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வார். எனினும் அந்த தரகர் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக பயன்படுத்தப்படும் பெல் 414 உலங்குவானூர்திகள் ஒப்பீட்டளவில் சிறியவை. மேற்குலக முக்கிய பிரமுகர்கள்  ரஷ்ய  தயாரிப்பு உலங்குவானூர்திகளிலேயே பயணம் செய்கின்றனர். ஐ.நாவின் பயன்பாட்டில் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகளே உள்ளன.

விமானப்படைக்கு மாத்திரம் 64.8 ரூபா செலவிடப்படவுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலாவது- இப்போது போர் இல்லாத நிலையில் இத்தகைய பாரிய கொள்வனவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?

எனினும், முப்படைகளின் பயன்பாட்டில் உள்ள போர்த்தளபாடங்கள் புதுப்பிக்கப்பட்டு, நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்ற வாதமும் உள்ளது.

பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ள போது, வரி செலுத்தபவர்களின் பணத்தை இராணுவ ஆயுதக் கொள்வனவுகளுக்குப் பயன்படுத்துவது முறையா என்ற கேள்வி உள்ளது.

இப்போது அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழல் இல்லை. அதைவிட,  பொருளாதாரத்தில் சில துறைகளுக்கு உதவ வேண்டுமாயின், படைக்குறைப்பை செய்ய வேண்டும் என்று சில மேற்குலக அரசாங்கங்கள் கோர ஆரம்பித்திருக்கின்றன.” என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *