புலிகளின் தலைவர்கள் சரணடைவதை சிறிலங்கா இராணுவம் விரும்பவில்லை
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் 2009 மே 17 ஆம் நாள் காலை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரதிநிதியுடன் பேச்சு நடத்தி, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளித்ததாகவும், அவர் கொழும்பில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2009 மே 17 ஆம் நாள் மாலையில், அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி உரையாடல் குறித்து விளக்கமளித்த சரத் பொன்சேகா,
“ அனைத்துலக செஞ்சிலுவைக் குழு மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சரணடைய அனுமதிக்க, ராஜபக்ச குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், இராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் மறுத்ததுடன், மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்புவதாக கூறினர்.
தொலைபேசி உரையாடலின்படி, விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்த்தனர்.
அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்று விரும்பினர்.
இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால், திட்டம் தோல்வியடைந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். அவர் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.
அந்த குறிப்பிட்ட நாளில், நான் சீனாவில் இருந்தேன். அனைத்துலக செஞ்சிலுவைக் குழு மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
2009 மே 17ஆம் நாள் அந்த பேச்சுக்கள நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவர்கள் இறந்து விடுவார்கள் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும்.
சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது.
சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்ற ராஜபக்சவினரின் கோரிக்கையை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்ததால், 2009 மே 19ஆம் நாள் விடுதலைப் புலிகளை இராணுவத்தினால் அழிக்க முடிந்தது.
இந்த தொலைபேசி உரையாடலை காணொளியாகப் பதிவு செய்த ஊடகவியலாளர் கொல்லப்படுவார் என்ற பயத்தில் நாட்டை விட்டு ஓடினார்.
மூன்றாம் தரப்பினர் மூலம் அண்மையில் தான் அந்த காணொளியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
