மேலும்

இரண்டரை மணிநேர பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது மைத்திரி- ரணில் மோதல்

சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், சிறிலங்கா பிரதமர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்திருந்தார். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பஜெட் வீதியில் உள்ள தனது வதிவிடத்தில் சிறிலங்கா பிரதமருடன் அவர் இரண்டரை மணிநேரம் பேச்சுக்களை நடத்தினார்.

கூட்டு அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் எரிச்சலூட்டும் வகையிலான தொடர் பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது குறைந்தபட்சம், பிரதானமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, துமிந்த திசநாயக்க ஆகிய நான்கு அமைச்சர்களே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்மையில் சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த அமைச்சர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இவர்கள்,  ஐதேகவின் முக்கியஅமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் காசிம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா பிரதமரையும், சிறிலங்கா அதிபரையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறிலங்கா அதிபருக்கும், பிரதமக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பது குறித்தும், 2015 ஜனவரி தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகவியலாளர்கள் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கீத் நொயார் கடத்தல், பிரதீப் எக்னெலிகொட கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணைகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், அதனை சிறிலங்கா காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து. தனது உதவியாளர்கள் மூலம், காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை, உடனடியாக அந்தக் கூட்டத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைத்து இதற்கான உத்தரவுகளை வழங்கினார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *