மேலும்

முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ரம்ஸான் நோன்பை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் கடந்தவாரம்  இப்தார் விருந்து, அளித்தார்.

இந்த விருந்துக்கு இம்முறை, முஸ்லிம் வணிகர்களுக்கு மாத்திரமன்றி, மேற்காசிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த இப்தார் விருந்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும், இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.

எனினும், அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை அடுத்து, நிலைமைகளை தலைகீழாக மாறியது.

2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இந்த நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீள நிலைப்படுத்துவதில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

அடுத்த ஆட்சியமைக்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அண்மையில் கோத்தாபய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *