மேலும்

ரணிலின் அரசியல் தலைவிதி மாறுமா? – இன்றிரவு வாக்கெடுப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இன்றிரவு 9 மணிக்குப் பின்னர் நடைபெறவுள்ள வாக்கெடுப்பு சிறிலங்காவின்  அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இரவு 9 மணிவரை விவாதத்தை தொடர்ந்து, ஓய்வின்றி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, பொது பார்வையாளர் அரங்கில் பாடசாலை மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனினும் சபாநாயகர் மாடத்தில், சிறப்பு அழைப்பாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

இரவு 9 மணியளவில் விவாதம் முடிந்த பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும். பெயர் அழைத்து அல்லது வரிசை அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறலாம்.

இந்த வாக்கெடுப்பில் தம்மால் வெற்றி பெற முடியும் என்று ஐதேகவும், கூட்டு எதிரணியும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நம்பிக்கையில்லா பிரேணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி உறுதியெடுத்துள்ளது.

பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிரணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஜேவிபியின் ஆறு உறுப்பினர்களும், இதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐதேக அணிக்கு 106 ஆசனங்கள் உள்ளன.  இதில், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 96 ஆசனங்கள் உள்ளன. இதில் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுகிறார். எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற முக்கிய தரப்பாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *