சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நேற்றுடன் ஓய்வு
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்றுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலை தளபதிப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இலகு காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, கடந்த 2017 ஜூலை 21ஆம் நாள், சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவுக்கு பனாகொடவில் உள்ள இலகு காலாட்படை தலைமையகத்தில் நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இவர் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த போதே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை இடம்பெற்றிருந்தது.
இந்தக் கொலை தொடர்பாக, மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவிடம் அண்மையிலும் விசாரணை நடத்தப்பட்டது, இவர் கைது செய்யப்படவுள்ளார் என்றும் தகவல் பரவியமை குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர ஓய்வு பெற்றதை அடுத்து இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, இன்னமும் யாரும் நியமிக்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்தில் உள்ள மூன்று மூத்த மேஜர் ஜெனரல்கள் இந்தப் பதவிக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும், இவர்களில் ஒருவர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார்.