மேலும்

சீனாவைக் குறிவைக்கும் இந்தியாவின் கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா போர்க்கப்பல்களும் விரைவு

SLNS Samudura - SLNS Suranimalaஇந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள மிலன்-2018 கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படை இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ர, எஸ்.எல்.என்.எஸ்  சுரனிமல ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக நேற்று திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

27 அதிகாரிகள் மற்றும் 6 பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட 284 கடற்படையினருடன் சிறிலங்கா கடற்படையின் இரு போர்க்கப்பல்களும் எதிர்வரும் 6ஆம் நாள் விசாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையும்.

மிலன்-2018 கூட்டுக் கடற்படைப் பயிற்சி மார்ச் 6ஆம் நாள் தொடக்கி 13ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

SLNS Samudura - SLNS Suranimala

இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசியா,  மொறிசியஸ், மியான்மார், நியூசிலாந்து, ஓமான், வியட்னாம், தாய்லாந்து, தன்சானியா, சிங்கப்பூர், பங்களாதேஸ், இந்தோனேசியா, கென்யா, கம்போடியா ஆகிய 15 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கவுள்ளன.

மாலைதீவு கடற்படைக்கும் இந்திய அழைப்பு விடுத்திருந்தது, எனினும், இந்தியாவின் அழைப்பை மாலைதீவு நிராகரித்து விட்டது.

இந்தக் கூட்டுப் பயிற்சி இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒரு நகர்வாக கருதப்படுகிறது. சீனாவும் இந்தப் பயிற்சி தமக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *