மேலும்

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆணைக்குழு பரிந்துரை

Mahinda-Gotaசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஐரிஎன் எனப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி இழப்பை ஏற்படுத்தியமைக்காகவே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதிகர் தேர்தலின் பரப்புரைக்காக ஐரிஎன் தொலைக்காட்சியை கட்டணமின்றி பயன்படுத்தியதால், 102,158,058 ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் இது ஒரு குற்றம் என்றும் எனவே மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதேவேளை, இதே சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ச, மேஜர் நிசங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ, முன்னாள் கடற்படை அதிகாரிகளான சிசிரகுமார கொலம்பகே, மக்சிமஸ் ஜெயரத்ன, ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரக்ன லங்கா பணியாளர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பொறுப்பாளி என்றும் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *