மேலும்

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது

gnaniஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ  பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட,  தினமணி கதிர் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.

தமிழகத்தில் வீதி நாடக இயக்க முன்னோடிகளில் ஒருவர். ‘பரீக்‌ஷா’ நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வருபவர். நூற்றுக்கு மேற்பட்ட முறை நாடகங்களை அரங்கேற்றியவர். தந்தை பெரியார் பற்றிய ‘அய்யா’ என்கிற நாடகத்தை தயாரித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்.

தமிழக மக்களின் பிரச்சனைகள் மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிடும் களப் போராளி. சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரைத் தொகுப்புகள் எனப் பல நூல்களை எழுதிய அசலான சமூகப் போராளி.

தமிழ் தேசியத்தின்பால் ஈடுபாடு கொண்டு எமது தேசத்துக்காக சாகும் வரை குரல் கொடுத்தவர் ஞாநி.

அவர் இந்து நாளிதழில் பணியாற்றிய காலத்தில்தான் எமது தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஆழமாக நேசித்து இந்து பத்திரிகை குழுமத்தையே எமது போராட்டத்தின் மீது நேசிக்க வைத்தவர். அவரது முயற்சியினால் தான் தேசியத் தலைவரின் புகழ் இந்திய நாட்டுக்கு தெரியும் சூழலை உருவாக்கியவர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஈழ விடுதலைக்கான குரலை உலகறியச் செய்வதற்காக உழைத்த பலரில் முதன்மைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் வீட்டிலேயே ஈழ ஆதரவு மாநாட்டை நடத்திய பெருமைக்குரியவராக இருந்தார்.

இலங்கை- இந்திய ஒப்பந்த காலத்தில் தமிழீழம் வந்த இந்திய அமைதிப்படைகளின் அட்டூழியங்களை முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி சிங் அவர்களுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைத்து, அவரை ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு நிலையை எடுப்பதற்கு காரணமாக இருந்தவர்.

gnani

கலைஞர் கருணாநிதி அவர்களோடு இணைந்து இந்திய அமைதிப்படையை எமது மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கு காரணமாக முன்னின்று உழைத்தவர்.

முதல் முதலில் தமிழகத்தில் எமது விடுலைப் போராட்டத்துக்கான ஆதரவு நிலைப்பட்டை எடுத்து ஈழ ஆதரவுச் சக்திகளுடன் இணைந்து தனது தெருவழி நாடகங்களினூடாக ஈழத்தமிழர் படும் அவலங்களை வெளிக்கொண்டு வந்த பெருமைக்குரியவர்.

2009 ல் போர் உக்கிரமடைந்த போது அப்போர் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை வேரோடு சாய்ப்பதற்காகவே நடத்தப்படும் திட்டமிட்ட சதிவலை என போர்குரல் எழுப்பியவர்.

தமிழகத் தலைவர்கள் ஈழத்தமிழரின் மரண ஓலங்களை தமது அரசியலாக பயன்படுத்துகின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டி எழுதியும் பேசியும் வந்தவர்.

தன் இறுதி மூச்சு உள்ளவரை ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர்.

உதாரணமாக அண்மையில் இந்திய மத்திய அரசு தமிழகத்தில் இருக்கும் அகதி முகாங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியபோது, தமிழர் தடுப்பு முகாம் ஒரு மரணப் புதைகுழி என பகிரங்கமாக குற்றம்சாட்டி , அவர்களுக்கான மறுவாழ்வு உறுதிப்படுத்த வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுத்தவர்.

இப்படி ஞாநி அவர்களின் ஈழத்தமிழர்களுக்கான ஆரவுக்குரல் நீண்டு செல்லக்கூடியது.

நிறைவாக, நான் அவரோடு தொடர்பில் இருந்தவரை ஈழத்தமிழர்களுக்கு தான் ஒரு மாபெரும் தவறை இழைத்து விட்டேனே என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாக அடிக்கடி கூறுவார்.

அந்த தவறு ஞாநி அவர்கள் தெரிந்து செய்த ஒன்று அல்ல. இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் நினைத்திருக்கவில்லை என அடிக்கடி வருத்தப்படுவார்.

சிறீ பெரும்புத்தூரில் நடத்த ஒரு துன்பியல் சம்பவத்தை ஒலிப்பதிவு செய்த அவர் அதை விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்திருந்தார். அந்த ஒலிப்பதிவு நாடாவை ஆதாரமாக வைத்தே சிறீபெரும்புத்தூர் துன்பியல் சம்பவத்தின் விசாரணை ஆரம்பமானது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான செய்தியாகும்.

அன்புத்தோழரே ஞாநி அவர்களே சந்தேகமே இல்லாத உங்களின் பேரிழப்பு… எம்மை ஒருகணம் நிலைதடுமாற வைத்துவிட்டது.

உங்களின் அந்த கரகரத்த குரலை,  என்ன வாணரே …. என்ன உங்களின் நிலை சொல்லும் கேட்போம் …. என கேட்கும் உங்களின் அந்த ஆஸ்மார்த்தமான ஒலியை இனி எப்போ கேட்பது?

அண்மையில் கூட ஆன்மீகம் அரசியல் என்ற ஒரு விவாதப்பொருள் பேசுபொருளாக இருந்த போது, எது ஆன்மீகம் எது அரசியல் என முறுக்குமீசையுடன் தர்கிதம் புரிந்தீரே.

யார் பெரியார் வழிவந்தவர்கள். எது திராவிடக் கொள்கை என்ற ஒரு கேள்வியை நான் உங்களிடம் முன்வைத்த போது, வாணரே நீர் சொல்வது போல் தி.மு.க வோ அ.தி.மு.க வோ இன்று பெரியார் வழியில் வாழவும் இல்லை நடக்கவும் இல்லை,  உண்மையில் ஞாநி மட்டும் தான் அந்த கொள்கையோடு வாழுகிறான், அந்த கொள்ளையோடுதான் என் இறுதி மூச்சுவரை தொடரும் என்றீரே.

அய்யன் அய்யனே, எது எவ்வளவு உண்மை என்பதை உங்கள் சாவுவரை நிரூபித்தீரே…

அய்யா… உம்மைப்போல் போல் சிந்திக்க, உம்மைப் போல் செயல்பட, உம்மைப்போல் எழுத,  இனி எமக்காக தாய் தமிழகத்தில் யாருமே இல்லை என்கிற பொழுது அவரது இழப்பு துருவப்பிரதேச குளிராய் நமது எலும்புகளை ஊடுருவுகிறது.

போய் வாருங்கள் ஞாநி …

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்மையாக வாழ்ந்தீர்கள்.

சமூகத்தின் அறமும் மனிதமுமாக இருந்தீர்கள் …

போய்வாருங்கள் …

மாபெரும் எழுத்தாளுமை, நுட்பமான பார்வை, மறுக்க முடியாத விவாதங்கள் என தமிழ் எழுத்துப் பரப்பில் இடையறாது இயங்கிக் கொண்டிருந்த ஆளுமை ஒன்றை தமிழ்ச்சமூகம் இழந்திருக்கிறது.

தமிழ் மக்களின் உறுதியான உரிமைக் குரல். என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு முன்னோடி. ஞாநி உங்களை இப்படி பறிகொடுப்போம் என எண்ணவில்லை.

ஒரு குடும்பத்தின் இழப்பல்ல ஐயா நீ!

வருத்தங்கள்தான்.

மனிதர்களுக்கேயுள்ள இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் இருந்திருக்க கூடாதா? என்கிற ஏக்கம்தான் இன்று இரங்கல்களாக வெளிப்படுகின்றன.

“மனித உடலுடன் உறவாடும் மருத்துவர் எப்படி அதில் பொறுப்பின்றி விளையாட முடியாதோ, அதேபோல மனித மனங்களுடன் உறவாடும் சமூக படைப்பாளிகளும் பொறுப்பின்றி எழுத்தாளன் என்ற பெயரில் விளையாட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”

என அடிக்கடி எடுத்துரைக்குக் மானுட விடுதலை குரல் அய்யா நீ

ஞாநி அவர்களுடனான எனது நெருக்கம் “தியாகி”திலீபனின் முதலாமாண்டு அகவணக்க கவியரங்க நிகழ்வு ஒன்றினூடாகவே தொடங்குகிறது. கவிஞர் மேத்தா,தோழர் சந்தானம், தோழர் அருள்மொழி, கவிஞர் புலமைப்பித்தன், முனைவர் நடராஜன் (சசிகலாவின் கணவர்), பேராசிரியர் சுபவீ, தோழர் இன்குலாப், ஊடகவியலாளர்களான தணிகைச்செல்வன்.குணாளன், திருமாவேலன்,ஜென்ராம், அருட்தந்தை ம.ஜெகத்கஸ்பார், காசி அண்ணர் என நீண்டு செல்லும் தமிழக சிந்தனையாளர்கள் மூலமாக தொடர்ந்த அந்த பிணைப்பு இன்று வரை தொடர்கிறது.

மேற்சொன்னவர்களில் சிலரை புலத்துக்கு அழைத்து எமது ஈழதேசத்து மக்கள் மத்தியில் நடைபெறும் எழுச்சி நிகழ்வுகளுக்கு வருவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்ட போது அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்து எனது பொறுப்புக்களை நான் சரியாக செய்வதற்கு உறுதுணையாக நின்ற ஓர் களப்போராளி நீங்கள்.

2009 இல் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவித்தலை நான் உங்களுக்கு சொன்ன போது கனத்த குரலோடு அதை உள்வாங்க முடியாமல் தவித்தீர்கள்.

முதன் முதலில் தமிழகம் எங்கும் தலைவரின் வீரச்சாவை உறுதிப்படுத்தும் செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு தமிழகம் தீப்பிழம்பாக மாறவேண்டும் என்று வேண்டினீர்கள்.

உங்களின் அந்த முயற்சியை தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலர் தடுத்து இம் மாபெரும் நெருப்பாற்றை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, அய்யா நெடுமாறன் தலைமையில் இயங்கும் உலகத்தமிழர் பேரவையிலிருந்து வெளியேறினீர்கள்.

இனி பிரபாகரனைப் போல் உண்மையும் உறுதியும் மிக்க தலைவன் உருவாகுவதற்கு ஈழத்தமிழ் சமூகம் எத்தனை யுகங்கள் காத்திருக்கப் போகிறதோ என ஆதங்கப்பட்டீர்கள்.

அய்யன் அய்யனே

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எழுத்தாளுமைக்கு எனது வீர வணக்கங்கள்.

போய் வாருங்கள் ஞாநி …

பேரிழப்பின் வலிகளோடு,

– அகதித்தமிழன் கி.அ

ஒரு கருத்து “ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது”

  1. mano says:

    மிக நல்ல கட்டாயமாக செய்யப் பட வேண்டிய பதிவாக மேற்படி பதிவைப் பார்க்கிறேன். ஈழத் தமிழன் நன்றி கெட்டவன் என்ற அவப் பெயருக்கு உட்படுத்த முடியாத வரலாற்றுப் பதிவு.

    வாணருக்கு சிறப்பான நன்றியும் பாராட்டுகளும். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்த படைப்பாளிதான் அமரர் ஞாநி. அவரது ஓ என் பக்கங்கள் ! என்ற தொடர் என்னை மிகவும் பாதித்த ஒன்று.

    ராஜீவ் காந்தி படு கொலை நிகழ்வைப் பதிவு செய்த அவரது பதிவில் எத்தனை முக்கியமான உண்மைகள் மறைக்கப் பட்டனவோ அந்த நாராயணனே அறிவான்.

    அறியாமல் அவர் செய்த தவறை வரலாறு நிச்சயம் மன்னிக்கும்.
    அவரது ஆத்மா சாந்தி அடையும் என்பதற்கு அவரது திடீர் மறைவும் கடைசி நிமிடம் வரை துக்ளக் ஆண்டுவிழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி நிகழ்த்திய உரையை தமது முக நூலில் அரசியல் விமர்சனம் செய்த அவரது சமூக நேசிப்பும் மானுடம் மறக்க முடியாதவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *