மேலும்

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

sakurai-heliபலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழாவில் பங்கேற்க, அமைச்சர் மகிந்த அமரவீர தனியார் நிறுவனம் ஒன்றின் உலங்குவானூர்தியில் பலாலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

உலங்குவானூர்தியை விமானி மன்னார் தீவில் தரையிறக்க முயன்ற போது, தான் அவருக்கு பலாலிக்கு செல்லும் வழி தெரியாது என்று தெரிய வந்தது.

இதையடுத்து, சுமார் 2 மணிநேரம் அலைக்கழிந்த பின்னர், எரிபொருள் தீர்ந்த நிலையில், உலங்குவானூர்தி பலாலியில் தரையிறக்கப்பட்டது.

sakurai-heli

விமானப்படை மறுப்பு

அதேவேளை, அமைச்சரை ஏற்றிச் சென்றது சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியே என்று வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன மறுத்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் பலாலிக்கு விமானப்படை விமானங்கள் எதுவும் பயணம் மேற்கொள்ளவில்லை. சிவில் விமானம் ஒன்றே அன்றைய நாள் பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழு

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு, சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“விசாரணைகள் நடந்து வரும் நிலையில், குறிப்பிட்ட விமானி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதுபொறுப்பற்ற தன்மை மாத்திரமன்றி, சரியான விமானப் பயணத் திட்டம் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல், விமானி ஒருவர் பயணத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானதும் கூட.

முக்கிய பிரமுகர் என்பதற்காக மாத்திரமன்றி, தனியொரு பயணியின் உயிருக்கும் கூட விமானி தீங்கிழைக்கக் கூடாது.

பாதை தெரியாமல் விமானி பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்குபடுத்தியது யார்?

இதற்கிடையே, சகுராய் எவியேசன் என்ற நிறுவனத்தின் உலங்குவானூர்தியிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்றும், குறித்த விமானத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஒழுங்கு செய்திருந்தனர் என்றும், கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *