மேலும்

கடைசிநேரம் வரை காத்திராமல் வேட்புமனுக்களை சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

Mahinda Deshapriyaஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை காலதாமதம் செய்யாமல் விரைவாகத் தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக அவர் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,

“உள்ளூராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் நாள் நடத்தப்படும். இதற்கான அரசிதழ் அறிவிப்பு,டிசெம்பர் 26ஆம் நாள் வெளியிடப்படும்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்காண விண்ணப்பங்களை அனுப்புவதற்கு எதிர்வரும் 22 ஆம் நாளே கடைசி நாளாளும், அரச பணியாளர்கள், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்தல் சட்ட மீறல்கள் பற்றிய அறிக்கைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. எனினும், அடுத்து வரும் வாரங்களில் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் இடம்பெறலாம்.

வேட்பாளர்கள் பரப்புரைக்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதமாகும். சுவரொட்டிகள், பதாதைகளை குறிப்பிட்ட இடங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் காட்சிப்படுத்தக் கூடாது.

வேட்பாளர்கள் தமது பரப்புரை சுவரொட்டிகளை தமது பரப்புரைப் பணியகங்களிலும், வாகனங்களிலும் மாத்திரம் ஒட்ட முடியும்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் தேர்தல் ஆணைக்குழு பக்கசார்பாக நடந்து கொண்டது என்று சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 23 வேட்பமனுக்கள் தான் நிராகரிக்கப்பட்டன. தமது தவறுகளை மறைப்பதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது குறை கூறக் கூடாது.

இரண்டாவது கட்ட வேட்புமனுத் தாக்கல் 21ஆம் நாள் நண்பகல் வரை இடம்பெறும். அரசியல் கட்சிகள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், நேரகாலத்துடன் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, உள்ளூராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, சில வட்டாரங்களில் வாக்களிப்பு நிலையங்களிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று வாக்களிப்பு நிலையங்களில் பதிவாக வாக்குகள், அதே வட்டாரத்தில் உள்ள ஒரு இடத்தில் எண்ணப்படும்.

தேர்தல் முடிவைப் பாதிக்கின்ற அல்லது பொதுச்சொத்தை சேதப்படுத்துகின்ற எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றால், அந்த தேர்தல் முடிவை ரத்துச் செய்வதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன்.

வேட்புமனுக்களை நிராகரிக்காத வகையில் முறைப்படி நிரப்ப வேண்டும்.  முதற்கட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களில் பல நிராகரிக்கப்பட்டமைக்கு, குறித்த கால எல்லைக்குள் சமர்ப்பிக்கத் தவறியதே காரணமாகும்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் கையளிக்கப்படாததாலேயே சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை அரசியல் கட்சிகளின் செயலர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.

சுயேட்சைக் குழுவின் வேட்புமனுக்களை அதன் தலைவர் கையளிக்க வேண்டும். முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மாத்திரமே, வேட்பாளர் ஒருவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியும்.

குறிப்பிட்ட நல்ல நேரத்துக்காக காத்திருந்து – குறிப்பிட்ட நேரத்துக்குள் தாக்கல் செய்யப்படாத சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பெண் வேட்பாளர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் எவர் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *