மேலும்

அடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது

pillayan-arrest (1)கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான், தமக்கு பிணை வழங்கப்படாமல் அடிப்படை உரிமை மீறப்படுவதாக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதியரசர்கள் சிசிர ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, விஜித் மலலகொட ஆகியோரின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இதன்போது பிள்ளையான் தரப்பில் முன்னிலையான, சட்டவாளர் சஞ்சீவ ஜெயவர்த்தன, தமது கட்சிக்காரர், 746 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான, அரச சட்டவாளர், சுதர்சன டி சில்வா, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்த வழக்கில் ஏழு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிள்ளையான் ஏழாவது எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு வரும் நொவம்பர் 6ஆம், 7ஆம், 17ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முடிந்த பின்னர், 2018 மார்ச் 20ஆம் நாள் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிப்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *