மேலும்

போர்வீரர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளிக்க முடியாது – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

pablo-de gaeiff (2)போர் வெற்றி வீரர்களை நீதியின்  முன் நிறுத்தமாட்டோம்  என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை   பாதுகாப்பதாக  கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை  மீறுவதாகும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

14 நாட்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் முடிவில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே பப்லோ டி கிரெய்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

“நான் சிறிலங்காவுக்கு ஐந்தாவது தடவையாக பயணம் செய்து பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயங்களை ஆராய்ந்திருக்கின்றேன்.   இம்முறை அளுத்கம, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,  மாத்தறை,  முல்லைத்தீவு, புத்தளம், மற்றும் திருகோணமலை  ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

கொழும்பில் சிறிலங்கா அதிபர்,  பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்,  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், தேசிய சகவாழ்வு,  அரசகரும மொழிகள் அமைச்சர்,  சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்,  இந்துசமய விவகார அமைச்சர், நீதி அமைச்சர், கல்வி அமைச்சர், அதிபரின் செயலர்,  பாதுகாப்பு செயலர்,  சபாநாயகர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர்,  இராணுவத்தளபதி,  கடற்படை தளபதி, விமானப்படைத் தளபதி, தேசிய  புலனாய்வு சேவை தலைமை அதிகாரி, பொலிஸ்மா அதிபர், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர், நல்லிணக்கத்தை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் செயலாளர்,  மனித உரிமை  ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள்,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, மற்றும் கிழக்குமாகாண ஆளுநர்கள்,  உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினேன்.

எனக்கு  முன்னர்  சிறிலங்காவுக்கு  பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.நா. நிபுணர்கள் வருகை தந்துள்ளனர்.  அவர்களின் விடயங்களையும் நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.

2015 ஆம் ஆண்டு நான் இங்கு வருகை தந்ததன் பின்னர் தற்போது நிலைமையை பார்க்கும்போது சில மாற்றங்களை அவதானிக்கின்றேன். குறிப்பாக 19 ஆவது  திருத்த சட்டத்தைக் குறிப்பிடலாம். நல்லிணக்க பொறிமுறைக்கான  ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கான  செயலணி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டாலும் அதன் பங்குதாரர்களாக  சிவில் சமூகப் பிரதிநிதிகள் இருந்தனர்.  மிகவும் குறுகிய காலத்தில்  இந்த செயலணியானது விரிவுபட்ட ஆழமான  ஒரு அறிக்கையை  முன்வைத்தது.  இதுவரையான காலப்பகுதியில்   இந்த அறிக்கையானது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது.

pablo-de gaeiff (3)

அடுத்ததாக  காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் தற்போது நியமிக்கப்படவுள்ளதாக அறிகின்றேன். இது ஒரு சுயாதீனமான நியமனமாக இருக்கும் என கருதுகின்றேன்.  நம்பகரமானவர்களை இதற்கு நியமிக்க வேண்டும்.

புதிய அரசாங்கமானது 100 நாள் வேலைத்திட்டத்திலேயே  பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை வழங்கியது. அந்த வாக்குறுதிகள் சிறிலங்கா இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. பிரேரணையிலும் காணப்படுகின்றது.  பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் சிறிலங்கா அரசாங்கத்தில் காணப்படும் தாமதமானது   பல்வேறு  துறைகளில்  கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருப்பதுடன்  நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக  காணி விடுவிப்பு விடயத்தை விரைவு தன்மை இருப்பதாக தெரியவில்லை.  சிறிலங்கா பாதுகாப்பு தொடர்பில் பல சவால்களை சந்தித்தது என்பதை மறுப்பதற்கில்லை.  அனைத்து மக்களுக்கும்  பாதுகாப்பை வழங்க வேண்டிய கடமை   அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் செயற்பாட்டில் தாமதமானது   ஆபத்துக்களை  ஏற்படுத்தும் என்பதையே பல்வேறு நாடுகளின்  அனுபவங்கள்  கற்றுத்தருகின்றன.

இங்கு நிலைமாறுகால நீதி தொடர்பான பொறிமுறை  என்பது வேட்டையாடுவது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது ஒரு களையெடுப்பும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு போர்வீரர்களை  நீதிமன்றம் முன் கொண்டு வரமாட்டோம் என பல்வேறு தரப்பினர் கூறுவதை அவதானிக்கின்றோம். இது   நிலைமாறு கால நீதி தொடர்பான  ஒரு தவறான  நோக்கத்தை மக்களுக்கு வழங்கிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதாவது பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான ஒரு பொறிமுறை என காட்டப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.   இங்கு யாரையும் வேட்டையாட முயற்சிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்பதாக   பொறுப்புக்கூறல் பொறிமுறை அமையும்.   பாதிக்கப்பட்ட அனைவரும் நீதியை எதிர்பார்க்கின்றனர்.  600 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும்  நீதி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன்  1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள்  யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக  விரட்டப்பட்டனர்.  இவ்வாறு  பட்டியல் நீள்கின்றது. இதுவொரு  முடிவில்லாத  பட்டியல் என்றே  கூறலாம்.

போர் வீரர்களை நீதிமன்றம்முன் கொண்டுவரமாட்டோம் என கூற முடியாது. பொறுப்புக்கூறல் பொறிமுறையானது  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன் சந்தேக நபர்களையும் பாதுகாக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. அதுமட்டுமன்றி   இவ்வாறு போர் வெற்றிவீரர்களை   நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் எனக்கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு செய்ய முடியாது. நீதிமன்றமே இதுதொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அண்மையில் பிரேசில் நாட்டில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவருக்கு எதிராக  வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த செயற்பாடானது  நீதியானது  உள்நாட்டில்  நிலைநாட்டப்படாவிடின்  அனைத்துலக மட்டத்திலாவது பெறப்படும்  என்பதற்கான ஒரு சான்றாகும்.

எனவே அரசாங்கம் உடனடியாக நம்பகரமான  பரந்துபட்ட  நிலைமாறுகால நீதிப்பொறிமுறை திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பது பிரேசில் சம்பவமானது மற்றுமொரு காரணம் என்பதை  மறந்துவிடக்கூடாது.

அந்தவகையில் நான்  எனது  சிறிலங்கா பயணம் மற்றும் அவதானிப்புக்கள் மதிப்பீடுகள் தொடர்பாக சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றேன்.  இங்கு ஐ.நா. சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் சட்டத்தினால் பிணைக்கப்பட்டவை அல்ல என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

pablo-de gaeiff (1)

பரிந்துரைகள்

கால அட்டவணையுடன் கூடிய  பரந்துபட்ட  மற்றும் சுயாதீனமான  நிலைமாறுகால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம்   உடனடியாக  முன்வைக்க வேண்டும்.  அந்த பொறிமுறையானது  உண்மை, நீதி,  நட்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை  உள்ளடக்கவேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக மக்களின் கருத்துக்களை  பெறுவதற்காக நியமிக்கப்பட்ட  சிறப்பு செயலணியின் பரிந்துரைகளின்   நன்மைகளை அரசாங்கம் பெறவேண்டும்.

இதுவரையான காலப்பகுதியில் ஐ.நாவின் உதவிகளை   சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக பயன்படுத்தவில்லை எனத் தெரிகின்றது. எனவே அரசாங்கம்  ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் பணியகத்தில் இருந்து மேலும் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை  உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டு வரப்படும் சட்டம் அனைத்துலக தரங்களைப்  பின்பற்றுவதாக அமைய வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்    தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விடயங்களை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும்.

இராணுவத்தினர் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் தொடர்பான ஒரு வரைபடத்தை  உடனடியாக தயாரிக்க வேண்டும்.  காணி விடுவிப்பு தொடர்பான ஒரு கால அட்டவணை அவசியமாகின்றது. மீளளிக்கப்படாத காணிகளுக்கு நட்டஈடு வழங்குவது அவசியமானதாகும். இது தொடர்பில் இராணுவத்தரப்பினர் மட்டும் முடிவெடுக்காத வகையிலான  திட்டம்  வேண்டும்.

மனித உரிமை காப்பாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  கடந்த காலங்களில்  செயற்பட்ட   ஆணைக்குழுக்களின்  அறிக்கைகள் ( வெ ளியிடப்படாதவை)  உடனடியாக வெளியிடப்படவேண்டும்.

சுயாதீன தன்மை வெ ளிப்படைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையில்  காணாமல் போனோர் குறித்த பணியகத்துக்கு  ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.  ஆணையாளர்கள் சிறிலங்காவின் பன்முகத்தன்மைகொண்ட சமூக கட்டமைப்பை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன்  கலந்துரையாடுவதற்காக   பிரதிநிதிகள்  காணாமல்போனோர் பணியகம் சார்பாக நியமிக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  இதற்கான பணியகங்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த காணாமல்போனோர் பணியகத்தை கண்காணிப்பதற்காக   பாதிக்கப்பட்டோரினால்  ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

தடவியல் விசாரணைகளுக்காக உள்நாட்டு, பிராந்திய, மற்றும் அனைத்துலக உதவிகளைப் பெறலாம். காணாமல்போனோர் பணியகங்களும் செயற்பாட்டில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து செயற்படவேண்டும்.

அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களின் நன்மை கருதி   உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று  நிறுவப்பட வேண்டும். இதற்கு ஒரு பரந்துபட்ட ஆணை வழங்கப்பட வேண்டும்.  இதற்கான சட்டமூலம் விரைவாக கொண்டு வரப்பட வேண்டும்.  உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் நியமனத்தில்  பாதிக்கப்பட்டோர் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களை  ஆராய்வது தொடர்பான தற்போதைய நீதி கட்டமைப்பில் காணப்படுகின்ற வரையறைகள்  குறித்து ஆராய்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இடம்பெறவேண்டிய நீதிபதிகளின்  தேசியத்துவம் தொடர்பான விவாதமானது  இந்த செயற்பாட்டை அரசியல் மயப்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

pablo-de gaeiff (2)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக ஒரு பரந்துபட்ட திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இது இனம், மதம், உள்ளிட்ட எந்தவொரு விடயத்தையும் கருத்தில்  கொள்ளாது முன்னெடுக்கப்பட வேண்டும்.  இந்தவிடயத்தில் பால்நிலை விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக  பெண்கள், குடும்பத் தலைவிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். நட்டஈடு வழங்குதல் ஆனது உண்மை மற்றும் நீதியை புறந்தள்ளுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. நட்டஈடு செயற்பாடானது பொறுப்புதன்மையுடன் செயற்படவேண்டும்.

இது உண்மையைக் கண்டறியும் ஆணையுடன் தொடர்புபடுவது பயனுள்ளதாக இருக்கும்.  காணி விடுவித்தல் தொடர்பான ஒரு கால அட்டவணையுடன் ஒரு வரைபடம் உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டும்.  இராணுவத்தரப்பினர் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான காணிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இது  இராணுவத்தரப்பினால் மட்டும் ஆராயப்படக்கூடாது. இதற்கான ஒரு பரந்துபட்ட பார்வைக் கொண்ட ஒரு அமைப்பு  உருவாக்கப்பட வேண்டும்.  காணி விவகாரங்களுக்காக ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

மக்கள் 30 வருடங்களாக தரமற்ற வசதிகளுடன்  வாழ்ந்ததைக் காணமுடிகின்றது.  இது  நடுத்தர வருமானம் கொண்ட நாட்டுக்கு பொருத்தமானதல்ல. இது தொடர்பான கொள்கை ஆராயப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான வீட்டுத்திட்டமானது  மக்களுக்கு பொருத்தமானதாக அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள்   தமது  உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையை  உறுதிப்படுத்த வேண்டும்.  இவ்வாறு   நினைவுகூரும் செயற்பாடானது நட்டஈடு  பெறுவதைப் போன்ற ஒரு உணர்வைக் கொண்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடானது   சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சட்டமா திணைக்களத்திற்கான அதிகாரங்கள்,  பாதுகாப்புத்துறை மீளாய்வு என்பன இங்கு ஆராயப்பட வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு   இடம்பெறும்  தற்போதைய நிலையில் அவசியமாகின்றது.

அனைத்துலக மனித உரிமை தரங்களை உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக  பலவந்தமாக  காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அனைத்துலக  சாசனத்தை சிறிலங்கா  அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.   எனது அறிக்கையில் நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக பல பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளேன். காரணம் நிலைமாறுகால   நீதித்துறையில் முக்கிய  பங்கை  வகிக்க உள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *