மேலும்

335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு

Srilanka-Electionஎதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

271 பிரதேசசபைகள், 41 நகரசபைகள், 23 மாநகர சபைகள் உள்ளிட்ட 335 உள்ளூராட்சி சபைகளுக்கும், ஜனவரி 20ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகி விட்டது.

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானியின் வரைவு வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் கையளிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி வெளியிடப்படும் வரையில், தேர்தல் ஆணைக்குழுவினால்,  தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாது.

வர்த்தமானி வெளியிடப்பட்டு 14 தொடக்கம் 17 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்படும். வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நாள் ஒரு சனிக்கிழமையாக இருக்கும். வேட்புமனுக்கள் பெறப்படும் கடைசி நாளில் இருந்து, ஐந்து வாரங்களுக்குக் குறையாத- ஏழு வாரங்களுக்கு மேற்படாத நாள் ஒன்றில் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் கடமையில் ஈடுபடும் பிரதான அதிகாரிகளுக்கான பயிற்சி செயல்முறைகள் நிறைவடைந்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 5 ஆயிரம் ரூபாவையும், அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 2000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *