மேலும்

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை – முக்கிய அம்சங்கள்

parliamentபுதிய அரசியலமைப்பு உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

116 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரைகளுடன், அரசியல் கட்சிகளின் முன்வைப்புகளும் பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 1 மற்றும் 2 ஆகியவற்றினால் உள்ளடக்கப்படும் விடயங்கள், அதிகாரப்பகிர்வு கோட்பாடுகள், அரச காணி, மாகாண நிரல் விடயங்கள் பற்றி மத்திய அரசாங்க சட்டம் இயற்றுதல், பிரதான ஆட்புலம், இரண்டாம் சபை, தேர்தல் முறைமை, ஆட்சித்துறை, அரசியலமைப்பு பேரவை, பெண்களின் பிரதிநிதித்துவம், பொதுமக்கள் பாதுகாப்பு, வழிப்படுத்தற்குழு உறுப்பினர்களின் அவதானிப்புகளும் கருத்துக்களும் ஆகிய 12 பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் அத்தியாயம்1இல் மக்களும்,அரசும், இறைமையும் ஆகிய விடயங்களும் அத்தியாயம் 2 இல் பௌத்த மதம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்குறித்த பிரிவுகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ள விடயங்களாவன,

மக்களும்,அரசும், இறைமையும்

இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும். அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும்.

இலங்கையானது அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு தத்துவங்களை பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு எனும் குடியரசாக இருத்தல் வேண்டும்.

இந்த உறுப்புரையின் ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும்.

அதேநேரம் அரசியலமைப்பின் 5 ஆம் உறுப்புரையின் கீழ், எந்தவொரு மாகாண சபையோ அல்லது அதிகாரசபையோ இலங்கையினது ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாக பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து விலகித் தனியாவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என்று முன்மொழியப்பட்டள்ளது.

பௌத்த மதம்

9 ஆவது உறுப்புரையில் விதந்துரைத்துள்ள பௌத்த மதம் தொடர்பாக , இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10 ஆம், 14 (1) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என்றும்,

அவ்வாறில்லாத பட்சத்தில், இலங்கையில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும். எல்லா மதங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் மற்றும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கும் அதேவேளையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என்றும் இரு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மாகாண அதிகாரப் பகிர்வு

அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவானது வழிநடத்தல் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களை இணைத்தல் தொடர்பில், இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மக்களது தீர்ப்பொன்றும் அவசியம் என்ற மேலதிக தேவையுடன் வைத்திருத்தல், இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பில் அங்கீகரித்தல் ஆகிய தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைகளின் கீழ் தொழிற்படும் அரசாங்கத்தின் மூன்றாவது மட்டமொன்றாக உள்ளூர் அதிகாரசபைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். நிதி போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் உள்ளூர் அதிகார சபைகள் தொடர்பிலான மாகாண சபைகளின் மேற்பார்வைத் தத்துவங்களை பாதிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு ஆக்கப்பட வேண்டும்.

மாகாண ஆளுநர் அரசியலமைப்பினால் அவருக்கு குறிப்பாக அதிகாரமளிக்கப்பட்ட விடயங்களை தவிர அமைச்சர்கள் சபையின் மதியுரையின் மீது அவர் தொழிற்படுத்தல் வேண்டும்.

ஆளுநரானவர் அதிபரினால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தினை வழிநடத்தல் குழு கொண்டிருக்கின்றது.

பொதுவான கரிசனைக்குரிய விடயங்களை கலந்துரையாடுவதற்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் பிரதமரையும் அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களையும் உள்ளடக்கிய முதலமைச்சர்களின் மாநாடொன்று கிரமமான இடைவேளைகளில் கூடுவதற்கு ஆணையளிக்கப்பட வேண்டும்.முதலமைச்சர்களின் அந்த மாநாட்டுக்கு பிரதமர் தலைமை தாங்குவார்.

இரண்டாம் சபை

மாகாண சபைகளில் இருந்து பெறப்பட்ட 45 உறுப்பினர்கள் (ஒரு மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு அடிப்படையில் ஒவ்வொரு மாகாண சபையும் அத்தகைய மாகாண சபையின் 5 உறுப்பினர்களைப் பெயர் குறித்து நியமித்தல்) மற்றும் மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு அடிப்படையில் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் என 55 உறுப்பினர்களை கொண்ட இரண்டாம் சபையொன்று இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் இரண்டாம் சபை ஆகிய இரண்டினாலும் விசேட (மூன்றில் இரண்டு) பெரும்பான்மைகளுடன் நிறைவேற்றப்பட்டாலன்றி எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் சட்டவாக்கம் செய்யப்படலாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை

தேர்தல் முறைமையானது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி ஆசனங்களை கொண்டுள்ள அதேவேளை இறுதி முடிவின் விகிதாசாரத்தை உறுதிப்படுத்துவதை எதிர்பார்க்கும் (ஆசன ஒதுக்கீடு) ஒரு கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையாக இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையானது தொகுதிவாரி அடிப்படையில் 140 (60 சதவீதம்) அத்துடன், இறுதி முடிவு விகிதாசாரத்தை பிரதிபலிப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் இழப்பீட்டு ஆசனங்களாக 93 (40 சதவீதம்) என நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 233 ஆக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை

தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டும் என்னும் பொதுவான கருத்தொருமிப்பு காணப்பட்டது. குறித்துரைக்கப்பட்ட நிலைமைகளில் மாகாண சபைகளுடன் தொடர்புடையவை உள்ளடங்கலான தத்துவங்கள் அதிபர்க்கு அளிக்கப்படுதல் வேண்டும். அதிபர் நிலையான பதவிக்காலம் ஒன்றுக்கு பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

பிரதமர் நியமனம்

பிரதமரின் நியமனத்திற்கான செயன்முறை தொடர்பில், பிரதமரின் நேரடித் தீர்வு, பிரதமரின் முன் பெயர்குறித்த நியமனம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமை ஆகியன பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அதிபருக்கு சிறப்பு அதிகாரம்

மாகாண அரசாங்கமொன்று குடியரசின் ஆட்புல எல்லைக்கும் அதன் இறைமைக்கும் தெளிவான ஆபத்தை ஏற்படுத்துகின்ற ஆயுதக் கலவரத்தையோ அல்லது கிளர்ச்சியையோ ஊக்குவிக்கின்ற அல்லது அரசியலமைப்பு மீதான ஒரு சர்வதேச மீறலில் ஈடுபடுகின்ற நிலைமையொன்று தோன்றும் போது பிரதமரின் ஆலோசனையின் பேரிலான அதிபர் பிரகடனமொன்றின் மூலம் மாகாண நிர்வாகத்தின் அதிகாரங்களை அதிபர் பொறுப்பேற்கலாம். அது மட்டுமல்லாது, அவசியமாகும் பட்சத்தில் மாகாண சபையை கலைக்கலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிரதான விடயங்கள் தொடர்பாக இத்தகைய முன்மொழிவுகள் காணப்படுகின்ற அதேநேரம் இவ்விடயங்கள் தொடர்பில் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட விடயங்கள் பின்ணிணைப்பாக செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி

இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும். – தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஒற்றையாட்சி என்ற சொல் குறிப்பிடப்படுவதோடு, அதன் பொருட்கோடல் சிங்கள மொழியில் இடப்பட்டதாகவே இருத்தல் வேண்டும். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

அதிகாரப் பகிர்வின் பிரதான கோட்பாடாக மாகாணம் விளங்குதல் வேண்டும் என்பதை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்கின்ற போதிலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களை இணைத்து மாகாண அலகுகளை உருவாக்குவது தொடர்பில் எவ்வித உரிமையும் வழங்கப்படக் கூடாது என்றும் இன்றளவில் அரசியலமைப்பிலும் மாகாண சபை சட்டத்திலும் உள்ள அவ்வாறு ஒன்றிணைவதற்கான உறுப்புரைகளை அச் சட்டக் கட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அடிப்படைவாத கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலை தடுக்கும் சட்ட ஏற்பாடுகளை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அது உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்படுகின்ற நீதிபதிகளை கொண்டதொரு நீதிமன்றமாக இருக்க வேண்டும்.

மாகாண ஆளுநர் சம்பிரதாயபூர்வமான கடமையை மாத்திரம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தாங்கள் இணங்கவில்லை.

தேசிய பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான காணிகள் பற்றி மேற்கொள்ளப்படும் நிறைவேற்றுத் தீர்மானங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவாலுக்கு உட்படுத்தப்படக் கூடாது.

அதுமட்டுமல்லாது, தற்போது காணப்படும் அளவிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை முழுமையாக நீக்குவது தொடர்பில் ஆட்சேபம் வெ ளியிடுகின்றோம் என்று அக்கட்சி முன்மொழிவுகளை மேற்கொண்டுள்ளதோடு இக்கட்சியின் பிரதிநிதிகளான அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா, ஏ.டி,சுசில் பிரேமஜெயந்த, டிலான் பெரேரா ஆகியோர் சமர்ப்பிப்புக்களை செய்துள்ளனர்.

ஜே.வி.பி-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை முற்றாக நீக்கப்பட வேண்டும் எனினும், அதற்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை உருவாக்கக் கூடாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை இல்லாதொழிக்கும் நிலையில் மாகாண சபைகளை பேணிவரும் போது ஆளுநரின் அதிகாரங்களை பலவீனப்படுத்தக் கூடாது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களை ஒரு அலகாக ஒன்றிணைப்பதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது.

அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை தனியாக ஸ்தாபிப்பதற்கு பதிலாக தற்போது காணப்படும் உயர்நீதிமன்றத்தையே விஸ்தரித்து அமுல்படுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திசநாயக்க, பிமல் ரட்நாயக்க ஆகியோர் சமர்ப்பிப்புக்களை செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை மாகாணங்களின் மாநிலங்களின் ஒன்றியமாக ஒன்றாக இருத்தல் வேண்டும். இலங்கை ஓர் ஐக்கியமான பிரிபடாத நாடு என்னும் சட்டகத்தினுள் சமஷ்டி அரசொன்றாக இருத்தல் வேண்டும்.

இலங்கை மதச் சார்பற்ற நாடொன்றாக இருத்தல் வேண்டும். பெரும்பான்மையான கருத்தொருமிப்பு பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படுவதற்கு சார்பாக இருக்குமாயின், அது தொடர்பான நியதிகளும் நிபந்தனைகளும் குறித்துரைக்கப்படுதல் வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக மாநிலமாக அமைதல் வேண்டும். மாகாண ஆளுநராக இருப்பவர் மாகாணத்தின் நிறைவேற்றுத் தத்துவத்தின் பிரயோகத்தில் தலையிடுவதற்கான தத்துவமெதனையும் கொண்டிருக்கலாகாது.

ஆளுநரின் தத்துவங்கள் அரசியலமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும்.

மாகாணங்கள் மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளை கொண்ட பிரதிநிதித்துவக் குழுவொன்றாக செனட் (இரண்டாம் சபை) இருத்தல் வேண்டும் என்ற முன்மொழிவுகள் உள்ளடங்கிய கூட்டமைப்பின் யோசனையை தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய

சமஷ்டி முறையென்ற கருத்தானது பெரும்பாலும் அரசியல் கோரிக்கையாகவும் போராட்டச் சுலோகமாகவுமே இருக்கின்றதே தவிர, உண்மையான சிக்கல்களுக்காகவும் தேவைகளுக்காகவும் பெற்றுக்கொடுக்கப்பட்ட தர்க்க ரீதியான தீர்வு கிடையாது.

இலங்கையின் இன ரீதியான பிரச்சினைகளையும் அபிலஷைகளையும் தீர்ப்பதில் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மறுசீரமைப்புகள் பயனுள்ளதாக அமையுமே தவிர மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாரப்பகிர்வு கிடையாது.

உள்ளூராட்சி ஆளுகைப் பிரதேசத்தினையே பன்முகப்படுத்தலுக்கான அலகாக நாங்கள் கருதுகின்றோம்.

அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கான தேவை எழாது என்பது எமது நிலைப்பாடு.

இரண்டாவது சபையொன்றை ஸ்தாபிப்பது காலத்தையும் பணத்தையும் தேவையின்றி வீணடிக்கும் விடயமாகவே அமையும் உள்ளிட்ட முன்மொழிவுகளை ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சமப்பித்துள்ளார்.

கூட்டு எதிரணி

கூட்டு எதிர்க்கட்சியானது ஒற்றை ஆட்சி அரசு என்பது மும்மொழிகளிலும் இடம்பெறவேண்டும்.

அதிபருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது உட்பட உப குழுக்களின் அறிக்கைகள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், பொதுமக்கள் கருத்துக்கள் மறுக்கப்பட்டுள்ளமை, இராணுவத்தினர் பாதுகாக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விமர்சன ரீதியிலான கருத்துக்களையும் ஒட்டுமொத்தமாக இடைக்கால அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் வகையிலுமே கூட்டு எதிரணியின் முன்மொழிவுகள் அமைந்துள்ளன.

கூட்டு எதிர்க் கட்சி சார்பில் தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த சமர்ப்பிப்புக்களைச் செய்துள்ளனர்.

நான்கு கட்சிகளின் கூட்டு முன்மொழிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரசினது முதன்மை அவதானிப்புகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றினது கூட்டு முன்மொழிகள் உள்ளடங்கிய சமர்ப்பிப்பை அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்துள்ளார்

அதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒரு மாகாண சபையாக இணைப்பதற்கான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கின்றது.

தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையானது மாற்றங்களின்றி அதே வடிவத்திலேயே இருக்க வேண்டும் என்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.

இலங்கை 26 நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு கரையை அடிப்படையாகக் கொண்ட ஒலுவில் மாவட்டம் 26 ஆவது நிர்வாக மாவட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரும்புகின்றது என்றாவான முன்மொழிவுகள் கட்சியை மையப்படுத்தியுள்ளன.

அதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றினது கூட்டு முன்மொழிவில்,

எந்தவொரு மாகாண சபையோ அல்லது ஏதாவது அரசியல் கட்சியோ அல்லது ஏதாவது அமைப்போ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ நேரடியான அல்லது மறைமுகமான வழிகள் மூலம் இலங்கையில் ஏதாவது அரசியல் அல்லது ஏனைய இலக்குகளை அடைவதற்கு ஆயுதச் செயற்பாட்டினை நோக்கிய முன்னெடுப்பினை முயற்சிக்கவோ அல்லது ஆதரித்து வாதாடவோ கூடாது.

இலங்கை யுனைடெட் ரிபப்ளிக் ஒப் சிறிலங்கா என அறியப்படும் சிறிலங்கா எக்சத் ஜனரஜய எனச் சிங்கள மொழியிலும் ஐக்கிய இலங்கை குடியரசு என தமிழ் மொழியிலும் அது அறியப்படும்.

அதிபரின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் மூலமான முன்மொழிவுகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். 3 உப அதிபர்கள் இருத்தல் வேண்டும். அவர்கள் சிங்களம், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையத் தமிழர் ஆகிய சமுதாயங்களை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் . உப அதிபர் பதவியை வகிப்போர் அதிபராக இருப்பவரின் சமுதாயத்தினை சாராதவராக இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்றம் இரு சபைகளை கொண்டிருத்தல் வேண்டும். அதில் முதலாவது சபை 245 உறுப்பினர்களையும் இரண்டாவது சபை இனத்துவ அடிப்படையில் 36 உறுப்பினர்களையும் (18 சிங்களம், 6 இலங்கைத் தமிழர்கள், 6 முஸ்லிம்கள் மற்றும் 6 மலையக தமிழர்கள்) கொண்டிருத்தல் வேண்டும்.

அரசியலமைப்பின் 18 ஆவது உறுப்புரையின் தற்போதைய வடிவமானது சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருக்கும் என திருத்தப்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் அவ்வாறே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு எண்ணக்கரு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுள்ளிட்ட 13 விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவைச் செய்துள்ளார்.

மேலும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலமைப்பு கோட்பாடுகள், சனசமூக சபைகள், அரச காணிகள், தேர்தல் முறை, இரண்டாவது சபை, நிறைவேற்று பதவி ஆகிய விடயப்பரப்புக்கள் தொடர்பிலான முன்மொழிவுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளடக்கம் -வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *