மேலும்

திருத்தப்பட்ட பின்னர் 20 ஆவது திருத்தம் குறித்து முடிவு – வட மாகாணசபை தீர்மானம்

npc20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு தொடர்பாக அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், முடிவெடுப்பது என்று வடக்கு மாகாணசபை இன்று தீர்மானித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில், மாகாணசபைகளைக் கலைக்கும் நாளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு அளிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சமர்ப்பித்துள்ளது.

இந்த வரைவு மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தென் மற்றும் ஊவா மாகாணசபைகள் இதனை நிராகரித்திருந்தன.

இதையடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு சிறிய திருத்தங்களுடன் மீண்டும் மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் 20 ஆவது திருத்தசட்டம் மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்களைப் பகிரவுள்ளதாக கூறும் அரசாங்கம், தற்போது மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பறித்துக் கொள்ள முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, மேல் மாகாணசபையும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்த விவாதத்தை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *