மேலும்

போர்க்குற்றவாளிகளை தண்டிக்காவிடின் அனைத்துலக சமூகம் அதைச் செய்யும் – சரத் பொன்சேகா

sarath-fonsekaஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாவும்,  அவருக்கு எதிராக  சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, ஜெனரல் ஜயசூரிய,  வவுனியாவில் விநியோகம் மற்றும் புனர்வாழ்வு வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

போர்க்களத்தில் பல இராணுவ டிவிசன்கள் இருந்தன. அவை எனது நேரடியான  கட்டளையின் கீழ் இயங்கின.  அவை ஜெனரல் ஜயசூரியவின் கீழ் இருக்கவில்லை.

அவர் வன்னி படைகளின் தலைமையக தளபதியாக மாத்திரம் இருந்தார். வவுனியாவின் முன்னரங்க நிலைகளை பாதுகாப்பதே அவருக்கான பணியாக இருந்தது.

போரில் ஈடுபட்ட படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்ளும், காயமடைந்த படையினரை வெளியேற்றும் பொறுப்பும் மாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.  எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல்,  பாதுகாப்பு அளித்திருந்தார் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த போது, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய பல்வேறு குற்றங்களை இழைத்தார்

iகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படடிருந்தவர்கள் தொடர்பாக, ஜெனரல் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்று எனக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. அவர் இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற பின்னரும் அதே உத்தியைக் கையாண்டார்.

யார் குற்றங்களை இழைத்தார்கள் என்பது தொடர்பாக என்னிடம் நிறையத் தகவல்கள் உள்ளன. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க முயற்சித்தேன். விசாரணை தொடங்கப்பட்ட போது, நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.

அவர் குற்றங்களைச் செய்தார் என்று அறிந்து, விசாரணைகளைத் தொடங்க முயற்சித்தேன். அதன் ஆரம்ப நடவடிக்கையாக ஜெனரல் ஜயசூரியவின் உதவியாளரை கைது செய்தேன். ஆனால் அந்த விசாரணையை நிறைவு செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை.

குற்றங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன. விசாரணைகள் தொடங்கப்பட்டு, இத்தகைய குற்றங்களை இழைத்தவர்களை கண்டறியப்பட்டு, நாட்டினதும், இராணுவத்தினதும் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவை இராணுவம் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டிய குற்றங்களல்ல. சில தனிநபர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள். இந்தச் சம்பவங்களை நாங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்.

உள்நாட்டில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அனைத்துலக பிரகடனங்களின் படி, ஐ.நா மற்றும் பாதுகாப்புச் சபை என்பன அவ்வாறு செய்ய முடியும்.

ஏதாவது குற்றங்கள் இடம்பெற்றால், அதில் தொடர்புடையவர்கள் மீது இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

அனைத்துலக நீதிமன்றத்தில், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியம் அளிப்பதா என்பதை, அரசாங்கம் தான் முடிவு செய்யும்.

ஜெனரல் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டாம் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் நான் கோரியிருந்தேன். ஆனால், மூத்த அதிகாரிகள் 17 பேர் இருந்த போது, ஜெனரல் ஜயசூரியவை தளபதியாக நியமித்தார்.

எனக்குப் பின்னர், இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க ஜெனரல் ஜயசூரிய தகுதியானவர் என்று நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், ஜெனரல் ஜயசூரிய, பாதுகாப்புச் செயலரின் தாளத்துக்கு ஆடினார். என்னை சிறைக்குள் இழுத்துச் செல்ல இராணுவத்தை அவர் வழி நடத்தினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதில் நானும், இன்னும் பல இராணுவ அதிகாரிகளும் நெருக்கடிகளை சந்திக்கிறோம்.

ஏனென்றால், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகள் மீது உள்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்,  அனைத்துலக சமூகம் அதனைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்.

தவறு செய்த அதிகாரிகளை தண்டித்தால், போரில் பங்கெடுத்த இரண்டு இலட்சம் படையினர், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவர்.

சிறிலங்கா இராணுவத்துக்கு சரியான அங்கீகாரம் தேவைப்படும் போது, சிறிலங்கா இராணுவம் விமர்சிக்கப்படுவதை கேட்கின்ற போது ஏமாற்றமாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *