மேலும்

மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம்

Chinese hospital ship Ark Peaceசீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark  தற்போது தனது ஆறாவது  ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பணியின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை சீனக் கடற்படையின் மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சீனக் கடற்படையின் மருத்துவ சேவையானது இவ்வாண்டு ஏன் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தொடர்பாக ரஸ்யாவின் அரசியல் ஆய்வாளர் விளக்கியுள்ளார்.

இவ்வாண்டு சீனாவின் கப்பலானது Peace Ark தனது 150 நாள் பயணத்தின் மூலம் எட்டு நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளது. எனினும் முன்னைய ஆண்டுகளை விட இவ்வாண்டு சீனாவின் மருத்துவக் கப்பலானது சிறிலங்கா மற்றும் டிஜிபோட்டி ஆகிய இடங்களில் தரித்து நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவின் 21வது நூற்றாண்டின் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தின் முக்கிய அமைவிடங்களாக சிறிலங்கா மற்றும் டிஜிபோட்டி ஆகிய இரண்டும் காணப்படுகின்றன. தவிர, ஆகஸ்ட் 01 அன்று சீன இராணுவம் தனது முதலாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை டிஜிபோட்டி யில் திறந்தது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

‘சீனாவின் Peace Ark மருத்துவக் கப்பலானது இராணுவ வசதிகளைக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. ஏனெனில் இக்கப்பல் பொதுத் துறைமுகம் ஒன்றிலேயே தரித்து நிற்கவுள்ளதுடன் பொதுமக்கள் இலகுவாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே சீனக் கடற்படை தனது மருத்துவ சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chaina_medical -ship (1)

டிஜிபோட்டி யில் சீனா தனது கடற்படைத் தளத்தை நிறுவி ஒரு மாதத்திற்குள் மருத்துவ சேவையை வழங்குவதற்காக Peace Ark  கப்பல் அனுப்பப்படுவதானது உலக நாகளுக்கு சீனா தனது சாதகமான பங்களிப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்பது தொடர்பான சந்தேகமற்ற ஒரு சமிக்கையாகக் காணப்படுகிறது’ என ஐரோப்பிய சபையில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஆசிய மற்றும் சீன நிகழ்ச்சித் திட்டத்திற்கான உதவி இயக்குனராகப் பணியாற்றும் மத்தியூ டுகாஸ்ரல் தெரிவித்துள்ளார்.

‘மனிதாபிமானப் பணிகளில் சீன மக்கள் இராணுவமானது மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்ற ஒரு நம்பகமான பங்குதாரர் என்கின்ற நிலையைக் காண்பிப்பதற்கான ஒரு நகர்வாகவே Peace Ark  மருத்துவப் பணியானது டிஜிபோட்டியில் மேற்கொள்ளப்படுகிறது’ என வல்லுனர் மேலும் தெரிவித்தார்.

‘டிஜிபோட்டியில் சீனாவின் மருத்துவ சேவை வழங்கும் கப்பல் தரித்து நிற்பதானது சீனாவின் பூகோள குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக டிஜிபோட்டியில் வாழும் உள்ளுர் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக சீனா தனது மென்சக்தியை முதலீடு செய்ய முயற்சிப்பதற்கான ஒரு நினைவூட்டலாகவே இது காணப்படுகிறது’ என வல்லுனரான மத்தியூ டுகாஸ்ரல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வல்லுனர் மத்தியூ டுகாஸ்ரல் தெரிவித்தது போன்று சீனாவின் உண்மையான நோக்கம் இதுவன்று. மென் சக்தி அல்லது மென் முதலீடுகள் எப்போதும் உள்ளுர் மக்களின் வர்த்தகச் சூழல் அல்லது உள்ளுரில் ஆளும் அரசியல் சக்திகள் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே சீனாவால் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என ரஸ்யாவின் பொருளாதார உயர் கற்கைப் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேயக் கற்கைத் துறையின் தலைவராக உள்ள அலெக்சி மஸ்லொவ் தெரிவித்துள்ளார்.

‘டிஜிபோட்டியில் சீனக் கடற்படை பிரசன்னமாகியுள்ளமை சீனாவின் ‘வன்’ சக்தியை நினைவுபடுத்துவதற்கான ஒரு சமிக்கையாகும். பல பத்தாண்டுகளாக, சீனா தனது ‘மென்சக்தியைப்’ பிரயோகிப்பதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. ஆனால் சீனா இராணுவ ரீதியாக தனது சாதனைகளை நிலைநாட்டுவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என அமெரிக்க வல்லுனர்கள் உட்பட பலர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்’ என அலெக்சி மொஸ்லொவ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சீனா தன்னுடன் ஒத்துழைக்க விரும்பும் அனைத்து நாடுகளையும் தனது இராணுவக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் உள்ளதால் இதனைத் தனது முக்கிய பங்காளி நாடுகளுக்குக் காண்பிக்க விரும்புவதாக அலெக்சி மொஸ்லோவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘சீனாவின் கடல் சார் இராஜதந்திரமானது சீனா தனது புதிய கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தும் வரை தொடரும்’ என மத்தியூ டுகாஸ்ரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

chaina_medical -ship (2)

‘ஏற்கனவே உள்ள கடல் வழிப் பாதைகளின் ஊடாக விரைவானதும் பாதுகாப்பானதுமான கடல் போக்குவரத்துக்களை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதே சீனாவின் திட்டமாகும். ஆனால் இக்கடல் வழிப்பாதைகள் நெரிசல் மிக்கதாக இருக்கும். எனினும் துறைமுகக் கட்டுமானம், கடல் வழிப்பாதைகளை அமைத்தல் போன்றன உட்பட சீனா தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நேரடி முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது’ என மத்தியூ டுகாஸ்ரல் தனது பத்தியில் எழுதியுள்ளார்.

சீனாவானது இந்திய மாக்கடலிலும் மத்திய கிழக்கிலும் தனது கடற்படைத் தளங்களின் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடுவதாக அலெக்சி மஸ்லோவ் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது திட்டத்தை நிறைவேற்றும் முதலாவது முயற்சியாகவே டிஜிபோட்டியில் தனது முதலாவது கடற்படைத் தளத்தை நிறுவியுள்ளதாகவும் வல்லுனர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் கரையோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சீனா தனது சரக்குக் கப்பல்களை பாதுகாப்பாகச் செலுத்துவதற்கும் சீனாவின் இந்நகர்வு மிகவும் அவசியமானதாகும்.

‘சீனா தனது கடற்படை மருத்துவப் பணிகளை ஆற்றுவதன் மூலம் ஏனைய நாடுகள் சீனாவின் உதவி தமக்குத் தேவை என்கின்ற எண்ணத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு பிராந்தியங்களிலும் சீனாவின் உதவி நாடப்படுத்துவதற்கும் சீனா தனது கடல் சார் அல்லது இராணுவக் கடல் சக்தியைப் பலப்புடுத்துவதற்கும் விரும்புகிறது’ என வல்லுனர் அலெக்சி மஸ்லோவ் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருப்பினும் சீனாவின் இந்த நகர்வானது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மிகப் பாரிய கடல் சார் முரண்பாட்டிற்கு எதிராக இடம்பெறுகிறது என  வல்லுனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீனா தனது கடற்படைக்கு ஆதரவளிக்க முடியும் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் சீனா தனது கரையோரப் பாதுகாப்புக்கள் போன்றவற்றிக்கு ஆதரவு வழங்கும் அதேவேளையில் அமெரிக்காவிற்கும் சாத்தியமான அளவு ஆதரவளிப்பது முக்கியமானதாகும். இதுவே சீனாவின் நீண்ட தூர நல்லிணக்கப் பணியின் பிரதான நோக்காகவும் உள்ளது’ என மஸ்லோவ் குறிப்பிட்டார்.

வழிமூலம்     – sputnik news

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *