மேலும்

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

tsunami-warningஇந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமாத்ராவின் பெங்குலுவில் இருந்து மேற்கே 73  கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில், இன்று காலை 10.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

6.4 அளவுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.

இது தயார் நிலையில் இருக்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே என்றும் மக்கள் யாரும் இடம்பெயரத் தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் கூறியிருந்தது.

tsunami-warning

இந்த நிலையில், சுமார் ஒரு மணிநேரம் கழித்து,  சிறிலங்காவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையை அடுத்து கரையோரப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லலாம் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *