மேலும்

இராணுவத்தை களமிறக்க எதிர்ப்பவர்கள் குற்றச்செயல்களுக்கு துணை போகிறவர்களாவர் – விக்னேஸ்வரன்

cmபோர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தேவைப்பட்டால் முப்படையினரைக் களமிறக்குவோம் என்று சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர்-

“முப்படையினரையும் களமிறக்கப் போவதாக காவல்துறை மா அதிபர் கூறவில்லை. காவல்துறையினருக்கு உதவியாக சிறப்பு அதிரடிப்படையினரையும், இராணுவத்தையும், தேவைப்பட்டால் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்க இருப்பதாகவே கூறினார்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன்.

ஆனால் குற்றங்கள் நடைபெறும் போது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.

செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் பேசும்போது காவல்துறை  அதிபருக்கு பின்வருமாறு கூறியிருந்தேன்.

cm-mahesh senanayakeஇராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதே போல் போர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது.

குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ, உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.

எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் , எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.

அப்படியானால், எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும்.

இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்கக் கூடாது, அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *