மேலும்

கட்டாருடன் இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துள்ள அரபு நாடுகள் – சிறிலங்காவுக்கும் நெருக்கடி

qatar_row_mapஇஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

ஐஎஸ், அல்கெய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு கட்டார் ஆதரவு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து,யேமன் ஆகிய நாடுகள் தமது இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டித்துள்ளன.

தமது நாட்டில் கட்டார் தூதுவர்களையும், மக்களையும் நாட்டை விட்டு வெளியேறவும் இந்த நாடுகள் காலக்கெடு விதித்துள்ளன.

மேலும் கட்டார் விமான சேவையின் விமானங்கள் தமது வான்பரப்பின் ஊடாகப் பறப்பதற்கும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன.

மேலும், சவூதி அரேபியா மற்று ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய விமான சேவைகளான எயார் அரேபியா, சவூதியா, கல்ப் எயார், எதிஹாட், பிளை டுபாய், எமிரேட்ஸ் விமான சேவைகள், கட்டார் தலைநகர் டோகாவுக்கான விமான சேவைகளை இன்றுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

qatar_row_map

கட்டாரில் அதிகளவு இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற நிலையில், இந்த நெருக்கடியால் சிறிலங்காவும் பாதிப்புகளை எதிர்நோக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கட்டாருக்கான விமான சேவைகளை பல நாடுகள் நிறுத்தியுள்ள நிலையில், நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

இதற்கிடையே,  சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள், கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்துள்ள நிலையில், கட்டாருடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பாக சிறிலங்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கட்டாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்றும் உள்ளது. அங்கு 10 ஆயிரம் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பதும், 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண உதைபந்தாட்டப் போட்டி கட்டாரிலேயே நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *