மேலும்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது – கிளிநொச்சியில் பேரணி

kilinochchi-demo (1)வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறும் நிலையில், கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று இரண்டாவது கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டச் செயலகங்களில், இராணுவ, மற்றும் அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் போது, அரச படையினர் வசமுள்ள தனியார் காணிகள் மற்றும் அரச திணைக்களக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கிளிநொச்சியில் நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் சிவில் பாதுகாப்பு படையினரால் நிர்வகிக்கப்படும் பண்ணைக் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

kilinochchi-demo (1)kilinochchi-demo (2)kilinochchi-demo (3)

இந்த நிலையில் கிளிநொச்சியில் இன்று காலை ஒன்று கூடிய சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஆண்களும், பெண்களும் தாம் பணியாற்றும் பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்றும், அவை தொடர்ந்து சிறிலங்கா படையினர் வசமே இருக்க வேண்டும் என்றும் கோரி பேரணி ஒன்றை நடத்தினர்.

சிவில் பாதுகாப்பு படையை வடக்கை விட்டு அகற்றக் கூடாது, என்று கோரியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், சிவில் பாதுகாப்பு படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளை வடக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் குரல் எழுப்பப்பட்டது.

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.  சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு இவர்களுக்கு 35 ஆயிரம் ரூபா ஊதியத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கி வருகிறது.

பண்ணைக் காணிகள் விடுவிக்கப்பட்டால் தமக்கான வேலைவாய்ப்பு பறிபோய் விடும் என்றும், தமது எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பண்ணைக் காணிகள் விடுவிப்புக்கு சாதகமாகப் பதிலளிப்பதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், சிவில் பாதுகாப்பு படையிலுள்ள முன்னாள் போராளிகளை தூண்டி விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் இந்தப் போராட்டத்தை இரகசியமாக ஒழுங்கு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *