மேலும்

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்

defence meeting (1)மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது முள்ளிக்குளம் கடற்படை முகாம் அகற்றப்பட்டு, அங்குள்ள காணிகள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

defence meeting (1)

உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பதில்லை என்பது பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார். அத்துடன், முள்ளிக்குளம் காணிகள் விவகாரம் தொடர்பாக விரைவில் மன்னார் ஆயர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், வியாழேந்திரன், கோடீஸ்வரன், சிறிநேசன், யோகேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோரும், மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசையும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *