மேலும்

அனைத்துலகப் பங்களிப்புக்கு எதிரான சிறிலங்காவின் நிலைப்பாடு- அமெரிக்கா கரிசனை

William J. Mozdzierzஎந்தவொரு நீதிப்பொறிமுறைகளிலும், அனைத்துலக பங்களிப்புக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி வில்லியம் ஜே மொஸ்ட்சியர்ஸ் இதுபற்றிக் குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், “சிறிலங்கா அரசாங்கம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட சிறப்பு ஆணை பெற்றவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை அமெரிக்கா வரவேற்கிறது.

2015 செப்ரெம்பரில் இருந்து மனித உரிமைகள், நீதி, மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தனது முக்கியமான கடப்பாடுகளை  நடைமுறைப்படுத்துவதை நோக்கி சிறிலங்கா நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.

இன்னும் அதிக ஜனநாயகத்தன்மையுடன் கூடிய புதிய அரசியலமைப்பை வரைவது, காணாமல் போனோர் சட்டத்தை நிறைவேற்றியது, காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பிரகடனத்தை உறுதிப்படுத்தியமை போன்றவற்றில், அதிபர் சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியை நாம் அங்கீகரிக்கிறோம்.

William J. Mozdzierz

நல்லிணக்க செயல்முறைகள் சிக்கலானவை. ஆனால், கடந்த 18 மாதங்களில் இடம்பெற்றதை விட இன்னும் அதிகமான முன்னேற்றங்களை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

4500 ஏக்கர் காணிகள் தனியார் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், போரின் போது  கைப்பற்றப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதைவிட, பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டபடி, சட்டவிரோதமாக செயற்படும் சம்பவங்கள் இப்போது குறைந்துள்ள போதிலும், பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைத்தல், சித்திரவதை செய்யப்படுதல் , பாலியல் வன்முறைகள், மற்றும்  துன்புறுத்தல்கள்  இன்னமும் தொடர்வதாக கிடைக்கும் அறிக்கைகள் கவலை தருகின்றது.

எந்தவொரு நீதிப் பொறிமுறைகளிலும், அனைத்துலக பங்களிப்புக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத் தரப்பின் அறிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில், நம்பகமான நீதித்துறை  செயல்முறைகள் பற்றிய நியாயமான கவலைகளை எழுப்பியுள்ளது.

ஆயினும், நீடித்த அமைதிக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்துலக கடப்பாடுகளை சொல்லாலும் செயலாலும், நடைமுறைப்படுத்துவது அவசியம்.

எனவே,   30/1 தீர்மானத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புகள் மற்றும் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மூலோபாயம் ஒன்றையும் காலஅட்டவணை ஒன்றையும் சிறிலங்கா அரசாங்கம் முன்வைப்பதை நாம் ஊக்குவிக்கிறோம்.

அரசியலமைப்பு திருத்தம், காணாமல் போனோர் செயலகத்தை செயற்பட வைத்தல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுதல், உண்மை ஆணைக்குழுவை உருவாக்குதல், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், மற்றும் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கம் இந்த செயல்முறைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விடயத்தில் அமெரிக்கா நெருக்கமாக செயற்படும்.என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *