மேலும்

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- நாடாளுமன்றில் அறிவிக்க சிறிலங்கா அரசு இணக்கம்

USA-SriLanka-Flagஅமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வது தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கும், சிறிலங்கா பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.

இராணுவ நடவடிக்கைகளின் போது, விநியோக உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும், தளங்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த உடன்பாடு வழி செய்கிறது.

10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் இந்த உடன்பாடு 2017 மார்ச் 5ஆம் நாளுடன் காலாவதியானது.

இந்த நிலையில், இந்த உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், ஜேவிபி இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று ஜேவிபி ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த இருதரப்பு உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், அமெரிக்காவே நன்மையடையும் என்றும் தெரிவித்த அவர், இந்த உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தக் கோரினார்.

உள்ளடக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கோ அமைச்சரவைக்கோ தெரியாமல் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் லக்மன் கிரியெல்ல, இந்த விடயம் குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *