மேலும்

ஜெனிவா தீர்மானம் கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தவில்லையாம்- ரணில் கூறுகிறார்

ranil-pm-400-seithyவெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இணங்கவில்லை என்றும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கே அரசாங்கம் இணங்கியது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஜெனிவா தீர்மானம் தொடர்பாக தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக் கூறல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2009ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள்  ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூனும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே 2012ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னைய அரசாங்கம் விசாரணை நடத்த இணங்கியிருந்ததுடன், 2014ஆம் ஆண்டாகும் போது இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அனைத்துலக சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்துக்கு அமைய செயற்பட்டிருந்தால் அனைத்துலகத்தால் அல்லது எம்மால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டி ஏற்பட்டிருக்கும். எனினும், எந்த சட்டத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவது என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம், எமது அரசாங்கம் ஒற்றுமையைக் குலைப்பதற்கோ, இறைமையை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது அனைத்துலக நீதிபதிகளை அமர்த்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ இணங்கவில்லை. அவ்வாறானதொரு யோசனைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுமில்லை, பங்காளராகவும் இல்லை.

2015ஆம் ஆண்டு தீர்மானத்தில்,  கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய சம்பவங்களை ஏற்றுக் கொண்டு பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், நடுநிலையான மற்றும் சுயாதீனமான வெளிப்படையான, பாரபட்சமற்ற உயர்ந்த தொழில்சார் நிபுணத்துவம் கொண்டவர்களின் ஊடாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என ஒருபோதும் அதில் கூறப்படவில்லை.

அரசியலமைப்புக்கு உட்பட்டதாக நீதிப் பொறிமுறையொன்று அமைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2009ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நாபொதுச்செயலருடன் இணங்கிய விடயங்கள் யாவும் இந்த தீர்மானம் மூலம் நீக்கப்பட்டன. நாம் உருவாக்கும் நீதிப் பொறிமுறை அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும். அரசியலமைப்புக்கு வெளியே சென்று எதனையும் செய்ய முடியாது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படும் நீதிப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள், பொதுநலவாய விசாரணையாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுமாறே கூறப்பட்டுள்ளது. நீதிபதிகளைக் கொண்டு நடத்தப்பட வேண்டும் எனக் கூறவில்லை. நாமும் ஆலோசனை பெறுவதாகக் கூறியுள்ளோம்.

2017 மனித உரிமை பேரவை அமர்வில் இரண்டு விடயங்கள் பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை. அனைத்துலக நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்ற விடயங்கள் அவருடைய அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பில் அவருடைய அறிக்கையை அரசாங்கம் வரவேற்றுள்ளபோதும், அதில் உள்ள விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கை குறித்து பதிலளிப்பதற்கு காலம் கோரியுள்ளோம்.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உண்மையை அறியும் ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் நியூயோர்க் சென்று விசாரணை நடத்துமாறு கோரினார்கள். அது மாத்திரமன்றி 2014ஆம் ஆண்டு ஜெனிவா சென்றிருந்த ஜி.எல்.பீரிஸ், மூதூர் வழக்கையும், திருகோணமலை வழக்குகளையும் நடத்தி வழக்குத் தாக்கல் செய்வதாகக் கூறியிருந்தார்.

சிறிலங்கா ஒருபோதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ளாது என்பதை சிறிலங்கா அதிபரும், நானும் பல தடவைகள் தெளிவாகக் கூறியுள்ளோம். இதுவே அரசாங்கத்தின் கொள்கை. சார்க் மற்றும் ஆசிய நாடுகளும் இவ்வாறான கொள்கையிலேயே இருக்கின்றன.

அனைத்துலக நீதிபதிகளை எமது நீதிமன்றங்களில் விசாரணைகளுக்காக நியமிக்கமாட்டோம். கலப்பு நீதிமன்றத்தை அமைக்க மாட்டோம் என்பதை மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்றத்தில் கூறுகின்றோம்.

அரசியலமைப்பின் படி இலங்கையர்களையே நீதிபதிகளாக நியமிக்க முடியும். இதனை மீறிச் செயற்பட முடியாது. இல்லாவிட்டால் அரசியலமைப்பை மாற்ற பொதுவாக்கெடுப்புக்கே செல்லவேண்டும்.என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *