மேலும்

இரகசிய மரணப் படை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா

gotaஇரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, கோத்தாபய ராஜபக்சவினால், இயக்கப்பட்டு மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் தலைமையில் செயற்பட்ட இரகசிய இராணுவக் குழுவொன்றே பொறுப்பு என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் அளித்துள்ளார் என்று குற்றப் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு இன்று கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார்.

“இந்தக் கொலைகளுடன் எந்த தொடர்புகளும் இல்லை என நான் மறுக்கிறேன். இரகசிய தாக்குதல் குழு செயற்பட்டது பற்றித் தெரிந்திருந்தால், சரத் பொன்சேகா இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு இராணுவப் புலனாய்வாளர் கைது

அதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றிரவு மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி மினுவாங்கொட பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, நேற்றிரவு 9.35 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே 5 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *