மேலும்

காங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா இராணுவம்

Sri_Lanka_Army_Flagமாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் அணியொன்று, பாரிய களப்பயிற்சி ஒத்திகை ஒன்றை காங்கேசன்துறையில் ஆரம்பிக்கவுள்ளது.

வரும் மார்ச் 27அம் நாள் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கும் இந்தக் களப் பயிற்சி ஒத்திகை, 9 நாட்கள் 1166 கி.மீ பயணம் செய்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சூரியவெவவில் நிறைவடையவுள்ளது.

மாலியில் ஐ.நாவின் சண்டை வாகனத் தொடரணியில் இடம்பெறவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினர் இந்தப் பாரிய ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

மாலியில் உள்ள களநிலைச் சவால்களை எதிர்கொள்வது குறித்த தயார்படுத்தல்களை மேற்கொள்ளவே இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயிற்சியில் கவசப்படை, இயந்திர காலாட்படை, மற்றும் ஏனைய உதவிப்படைப் பிரிவுகளுடன் 68 வாகனங்களும் ஈடுபடவுள்ளன.

போர் மற்றும் விநியோக நடைமுறைகள், கட்டளை மற்றும் தலைமைத்துவம், அவசரகால திட்டங்கள், போர் தொடரணி நடவடிக்கைகள், அவசர நிலையின் போது முடிவெடுத்தல், தொடரணி பயிற்சி உத்திகள், போராட்டங்களைக் கட்டுப்படுத்தல்,  வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், நிர்வாக மற்றும் விநியோகம், தொலைத்தொடர்பு பராமரிப்பு, மற்றும் ஏனைய நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து இந்தப் பயிற்சியில் கவனம் செலுத்தப்படும்.

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு சிறிலங்கா படையினரைத் தயார்படுத்தும் வகையிலேயே இந்தப் பாரிய பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *