மேலும்

அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகளால் ஆபத்தில் சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்

indonesia-tamils-boat (5)அண்மையில் அவுஸ்ரேலியாவிற்குப் பயணம் செய்திருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

‘புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறிலங்காவிற்குத் திரும்பிவர முடியும். நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். குடியகல்வுத் திணைக்களத்தின் 2017 ஜனவரி கணக்கெடுப்பின் படி, சிறிலங்காவைச் சேர்ந்த 86 ஆண்கள் தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும் அத்துடன் 24 ஆண்கள், 19 பெண்கள், 28 சிறுவர்கள் மற்றும் 15 சிறுமிகள் குடும்பம் குடும்பமாக தடுப்பு முகாங்களில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தற்போதும் புகலிடக் கோரிக்கையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  ஆகவே உண்மையில் புகலிடக் கோரிக்கை வழங்கப்பட முடியாது என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு, படகுகளில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்த சிறிலங்காவைச் சேர்ந்த 12 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வருமாறும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளது போன்றே சில ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவின் முன்னால் பிரதமர் ரொனி அபோட்டும் அறிவித்திருந்தார்.

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து அங்கு ‘அமைதி’ நிலவுவதாகவும் இதனால் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்ப முடியும் எனவும் அபோட் அரசாங்கம் அறிவித்திருந்தது.

2014ஆம் ஆண்டு, 153 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமான படகொன்று அவுஸ்ரேலிய கடற்படையால் இடைமறிக்கப்பட்டு சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இதேபோன்று, பிறிதொரு படகில் சென்ற 28 இலங்கையர்கள் அவர்களது சொந்த நாட்டு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

boat-tamils (4)

புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவுஸ்ரேலியாவானது அனைத்துலக சட்டத்தை மீறுவதுடன், அவுஸ்ரேலியாவால் கைச்சாத்திடப்பட்ட ஐ.நா அகதிகள் சாசனத்தின் விதிமுறைகளையும் மீறுவதாக அமைகிறது.   அபோட் அரசாங்கத்தின் காலப்பகுதியில், சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானமை சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 2015ல், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த நிலைமை மாறியது. அதாவது ஆட்சி மாற்றமானது சிறிலங்காவில் சாதகமான நிலை தோன்றியுள்ளமைக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனினும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் இடைக்கால நீதிப் பொறிமுறையை நிறுவுவதில் எவ்வித முன்னேற்றமும் காண்பிக்காமையானது புதிய தலைமைத்துவம் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குத் திரும்புவது தொடர்பாக சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருதல் அல்லது இதனை முன்னுரிமைப்படுத்துதல் உட்பட எவ்வித முன்னேற்றத்தையும் சிறிலங்கா அரசாங்கம் காண்பிக்கவில்லை.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குத் திரும்பும் போது இவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவியபோது,

‘நாங்கள் தற்போது காணாமற் போனோருக்கான அலுவலகத்தை ஆரம்பித்துள்ளோம். ஆகவே புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குத் திரும்புவது பாதுகாப்பானது’ என அவர் பதிலளித்திருந்தார். யுத்தத்தின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாக குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அலுவலகம் ஒன்று கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.

ஆனால் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. காணாமற் போனவர்கள் தொடர்பாக 20,000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஒரு முறைப்பாடு கூட புதிய அரசாங்கத்தால் விசாரிக்கப்படவில்லை. காணாமற் போன தமது அன்புக்குரியவர்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு கோரி தமிழ் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுடனான நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறவில்லை என்பதற்கான சாட்சிகள் உள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என பலமான விவாதங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்துவதானது கேள்வியை எழுப்பியுள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான சான்றுகளை 2016 டிசம்பர் மாதம் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இவ்வாறான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.

சித்திரவதையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களின் உடல்களில் பல்வேறு வடுக்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இவர்கள் வழங்கிய நேர்காணல்களில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுதல் மற்றும் பாலியல் சார் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுதல்,  புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுதல் போன்ற பல்வேறு விடயங்கள் சான்றுகள் மூலம் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சிறிலங்காவில் ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ தொடர்வதாகவும் ஐ.நா அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினருடன் தொடர்புடைய குழுக்களாலேயே இவ்வாறான வெள்ளை வான் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்கத்தை எதிர்த்துச் செயற்படுபவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான வெள்ளை வான் கடத்தல்கள் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கிலேயே இடம்பெறுகின்றன. சித்திரவதை மற்றும் ஏனைய வன்முறைகள் போன்றன நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாகவே தற்போதும் தொடர்கிறது. சிறிலங்கா அரச அதிகாரத்திற்கு எதிராக குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் சித்திரவதைகளிலிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்கின்ற சிறிதளவேனும் உத்தரவாதமின்றியே இலங்கையர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்காவிற்குப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பான தனது ஆதங்கத்தை 2014ல் அவுஸ்ரேலியாவின் அகதிகள் சபையின் நிறைவேற்று அதிகாரி போல் பவர் வெளியிட்டிருந்தார். கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத நீண்ட அரசியல் வன்முறை வரலாற்றை சிறிலங்கா கொண்டுள்ளதாக இவர் தெரிவித்திருந்தார்.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவுஸ்ரேலியா நோக்கி இலங்கையர்கள் புகலிடம் தேடிச் செல்வதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் 250,000 வரையான தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் 40,00 0 வரையான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியது.

இந்த யுத்தத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் இடம்பெயர்ந்த முகாம்களில் மனிதாபிமான உதவிகள் வரையறுக்கப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் படகுகள் மூலம் தமது உயிர்களைப் பணயம் வைத்து அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தனர்.

2015ல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

‘போர்க் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றம் காண்பிக்கவில்லை’

சிறுபான்மைத் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பிரச்சினையை முன்னுரிமைப்படுத்தி அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியது. சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படுவோர் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டது.

சிறிலங்காவிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள பலர் புகலிடக் கோரிக்கையாளர்களாக அல்லாது பொருளாதார நோக்கத்திற்காகவே சென்றுள்ளதாக அவுஸ்ரேலிய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான அரசியல் ரீதியான அறிவித்தல்கள் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தொடர்ந்தும் ஆபத்திலேயே சிக்க வைத்துள்ளது.

வழிமூலம்       – The conversation
ஆங்கிலத்தில் – Niro Kandasamy*
மொழியாக்கம் – நித்தியபாரதி

Niro Kandasamy

 

Niro Kandasamy* – PhD Candidate, School of Historical and Philosophical Studies, University of Melbourne

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *