மேலும்

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் ரணில், சம்பந்தன் உரை

ranil-sampanthanபுதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

என்ஐஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 16ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

நாளை பிற்பகல் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணொலி மூலம் உரையாற்றவுள்ளார்.

வரும் புதன், வியாழன் ஆகிய நாட்களில் பல்வேறு தொனிப்பொருள்களில் விவாதங்களும், கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 30 நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றன. பல்வேறு நாடுகளின் அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *