மேலும்

பதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா

Sri Lankan fishermen arrestedகச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.

பாக்கு நீரிணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த திங்கட்கிழமை இரவு சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

எனினும் சிறிலங்கா கடற்படையினர் இந்த சம்பவத்துக்கு தாம் பொறுப்பல்ல என்று நிராகரித்துள்ளதுடன், இதுபற்றி விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் செல்வதை இடைநிறுத்தியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் கச்சதீவு திருவிழாவையும் புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில், இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. இவர்கள் கூடிய விரைவில விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சிறிலங்கா மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

அதேவேளை, இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறிய 10 சிறிலங்கா மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இந்திய கடலோர காவல்படையினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *