மேலும்

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு

killing-studentsதுப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில்,யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமது வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் விஜித் மலல்கொட, துரைராஜா ஆகியோரைக் கொண்ட அமர்வு, அரசதரப்புக்குப் பதிலளிப்பதற்கு ஏப்ரல் 6ஆம் நாள் வரை காலஅவகாசம் வழங்கியுள்ளது.

விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 2016 ஒக்ரோபர் 20ஆம் நாள் கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினாலும் அதனால் ஏற்பட்ட விபத்தினாலும் மரணமடைந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினருமே தமது வழக்கு விசாரணையை வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரியுள்ளனர்.

தற்போது அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தம்மை யாழ். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தொடர்ந்து கொண்டு செல்வதால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *