மேலும்

மீனவர் படுகொலையால் கொந்தளிக்கும் தமிழ்நாடு – இந்திய- சிறிலங்கா உறவுகளுக்கு சவால்

indian-fisherman-shotஇராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவுக் கடலில் நேற்றுமுன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது கச்சதீவுக்கு அருகே நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் மீனவர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, ஏனைய மீனவர்கள் இறந்த மீனவரின் சடலத்தையும், காயமடைந்தவரையும் மீட்டுக்கொண்டு, நேற்றுக்காலை அவசரமாக கரை திரும்பினர்.

இந்தச் செய்தி பரவியதும், கபடலோரக் கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதுடன், ஆங்காங்கே மீனவர்கள் எதிர்த்துப் போராட்டங்களையும் நடத்தினர்.

indian-fisherman-shot

தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விடயத்தை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன், சிறிலங்கா தூதுவரை அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

அதேவேளை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன், சிறிலங்கா கடற்படைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மீனவர் கொல்லப்பட்ட விவகாரத்தினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள சிறிலங்கா தூதரகம் மற்றும் முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவத்தை அடுத்து, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, நேற்று சிறிலங்கா பிரதாமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது சிறிலங்கா கடற்படை முழு விசாரணை நடத்த இணங்கியுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் தெரிவித்ததார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மீனவர் படுகொலை விவகாரத்தினால், இந்திய மத்திய அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே 12ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த விவகாரம் இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *