மேலும்

கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்கிறது சிறிலங்கா விமானப்படை

keppapilavu (4)கேப்பாப்பிலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 42 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு சிறிலங்கா விமானப்படை முகாமுக்கு முன்பாக, பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஜனவரி 31ஆம் நாள் தொடக்கமும், புதக்குடியிருப்பு மக்கள் பிரதேச செயலகம் முன்பாக பெப்ரவரி 3ஆம் நாள் தொடக்கமும்- தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபருடன் கடந்த பெப்ரவரி 14ஆம் நாள் கலந்துரையாடியதாகவும்,இதன் போது, இந்தக் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் இணங்கியதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேசியதாகவும், காணிகளை பெப்ரவரி 28ஆம் நாள் விடுவிப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும் சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

அதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்படும் என்று, கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் கட்டளை அதிகாரி, முல்லைத்தீவு மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் உறுதியளித்திருக்கிறார்.

நேற்று காணிகளை அளவீடு செய்யும் பணிகளும் அரச மற்றும் விமானப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளில்,  ஏழரை ஏக்கர் காணிகள் இரண்டு வாரங்களிலும், மற்றொரு பகுதி காணி மூன்று மாதங்களிலும், பொன்னம்பலம் மருத்துவமனை அமைந்திருந்த காணி ஆறு மாதங்களிலும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி உறுதிப்பாட்டுக் கடிதம் ஒன்றை அரச அதிகாரிகள் மூலம் நேற்று வழங்கியுள்ளார்.

எனினும், காணிகள் கையில் கிடைக்கும் வரை தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, காணிகள் விடுவிப்பு சிறிலங்கா அதிபர் உறுதியளித்தவாறு இடம்பெறும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தாம் நேற்று சிறிலங்கா பதில் பாதுகாப்புச் செயலருடனும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருடனும் தொலைபேசியில் உரையாடியாதாகவும், சிறிலங்கா அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இடம்பெறுவதாக அவர்கள் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் சம்பந்தன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *