மேலும்

புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா

karunaசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், நேற்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று விடுதியொன்றில் நடத்திய சந்திப்பின் போதே அவர் புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் பொதுச்செயலராக கமலதாசன் அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கருணா அறிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அரசியல் உரிமைகள் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் இந்தக் கட்சி உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்தப் புதிய கட்சி நிரப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், மகிந்த ராஜபக்ச அரசில் இணைந்து கொண்ட கருணாவை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமித்திருந்தார்.

எனினும் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர்,  சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்ட போது, கருணாவிடம் இருந்து உபதலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசியலில் ஓரம்கட்டப்பட்டிருந்த கருணா, கடந்த மாதம் 27ஆம் நாள், நுகேகொடவில் கூட்டு எதிரணியினர் நடத்திய பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.

எதிர்காலத்தில் தாம் அரசியலில் ஈடுபடுவதானால், மகிந்த ராஜபக்சவின் கீழேயே செயற்படுவேன் என்று இந்தப் பேரணியில் உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையிலே அவர், மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.

ஒரு கருத்து “புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா”

  1. Gowrikanthan says:

    வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த ஒரு தனியான அரசியல்-பூகோள அலகாக மாறவேண்டும் என்பதற்கான போராட்டம் ஒரு புறம். இதற்கான தடை அகத்திலும் உண்டு புறத்திலும் உண்டு.
    இவ்விதம் ஒன்றிணைந்த அரசியல் பூகோள அலகு தனியொரு அரசின் (Nation State) அரசியல் அதிகாரத்தின் கீழ் அமையவேண்டும் என்பதற்கான போராட்டம் மற்றோர் புறம். இதற்கான தடையும் அகத்திலும் உண்டு, புறத்திலும் உண்டு.
    சிங்கள-பௌத்த தேசிய இனக் கட்சிகளை(Ethnic-Nationalist Parties) தேசியக் கட்சிகளாக(Nationalist Party) அடையாளப்படுத்தி அவர்களுடன் இணைவதற்கு அல்லது சமரசப் போக்கைக் கடைப்பிடிப்பதற்கான அரசியல் கட்சிகளை வடக்கிலும் கிழக்கிலும் உருவாக்குவதே அகத்தடையாகும். யாழ்-கொழும்பு இணைப்பு மேட்டுக்குடிகள்தான் இதுவரை இவ்விதமான அகத்தடைக் கட்சிகளை உருவாக்கிவந்தன. கருணா இவ் அகத்தடையை இன்னோர் கட்டத்துக்கு உயர்த்திவிட்டார். கிழக்கு மாகாண மேட்டுக்குடிகள் யாழ் மேட்டுக்குடிகளின் துணையின்றி பேரம் பேசலுக்கான ஒரு தனியான, ‘சுதந்திரமான” அமைப்பை உருவாக்கிவிட்டார்கள். சமரசவாத அரசியலானது அகன்றும் பரந்தும் வளர்வதைத் தடுப்பற்கு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் என்ன என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *