மேலும்

சீனாவின் வெள்ளை அறிக்கையும் சிறிலங்காவும்

maithri-xi (1)கடந்த வாரம் சீனாவினால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையானது, ஏன் சிறிலங்காவிற்கு தற்போதும் எதிர்காலத்திலும் சீனாவின் உதவி தேவை என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆசிய-பசுபிக் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தொடர்புபட்ட சீனாவின் கோட்பாடுகள் அடங்கிய வெள்ளை அறிக்கை, இப்பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு எத்தகையது என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளது.

சீனாவானது சிறிலங்காவின் அபிவிருத்திப் பங்காளனாக விளங்கியுள்ளது. சிறிலங்காவின் ஆட்சியைப் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் சீனாவுடனான உறவில் சில அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போதிலும் தற்போது மீண்டும் இந்த உறவு சுமூகமாக உள்ளாகியுள்ளது போல் தெரிகிறது.

2015 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் மே 2016 இலும் மலேசியா, மியான்மார் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகள் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிப்பைச் சந்தித்த போது, இந்த மூன்று நாடுகளுக்கும் சீனாவினால் உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக சீன அரசாங்கத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவானது சிறிலங்கா தொடர்பில் தனது பங்கை ஆற்றுவதற்குத் தயாராக உள்ளது என்பதையே சீன அரசாங்கத்தின் இந்த அறிக்கையின் மூலம் அனுப்பப்பட்டுள்ள செய்தியாக உள்ளது. ஆனால் சிறிலங்கா இதற்கு கைமாறாக எதையாவாது செய்ய வேண்டியுள்ளது என சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து நிற்கவில்லை.

‘ஆசிய-பசுபிக் பாதுகாப்பு ஒத்துழைப்பு’ தொடர்பான சீன அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கையானது அந்நாட்டு அரச சபை தகவல் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது.

maithri-xi (5)

இந்த அறிக்கையானது சீனாவின் பொதுவான, முழுமையான, ஒத்துழைப்பு சார்ந்த, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய பாதுகாப்பு எண்ணக்கருக்கள் மற்றும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை அடைந்து கொள்வதற்கான சீனாவின் அணுகுமுறை போன்றன தொடர்பாக விரிவாக விளக்கியுள்ளது.

பொது அபிவிருத்தியை அதிகரித்தல், பங்காளர்களைக் கட்டியமைத்தல், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பல்தரப்பு செயற்பாடுகளை முன்னேற்றுதல், ஆட்சியமைத்தல், இராணுவப் பரிமாற்றங்கள், பல்வேறு முரண்பாடுகளைக் களைவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்றன தொடர்பாகவும் சீன அரசாங்கத்தின் கொள்கை வகுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய-பசுபிக் பிராந்தியமானது பல்வேறு நாடுகளையும் உலகின் 60 சதவீதமான மக்கள் தொகையையும் கொண்டுள்ள பாரிய பிரதேசமாகும். உலகின் 60 சதவீதமான பொருளாதார செயற்பாடுகளும் 50 சதவீத வர்த்தக செயற்பாடுகளும் இடம்பெறும் பிராந்தியமாக இது காணப்படுகிறது.

இப்பிராந்தியமானது உலக வரைபடத்தில் கேந்திர முக்கியத்துவ அமைவிடத்தைக் கொண்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில், ஆசிய – பசுபிக் பிராந்திய அபிவிருத்தியானது மக்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் மிகப் பலமான இயங்குநிலைப் பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது.

அனைத்துத் தரப்பினரும் இப்பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இங்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்துலக சமூகத்துடனான உறவுநிலை வடிவமானது ஆசிய-பசுபிக் பிராந்திய நிலைப்பாட்டிற்கேற்ப மாற்றமுற்றுள்ளது.

இப்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிப்பதில் சீனா தன்னை அர்ப்பணித்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் சமாதான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து நாடுகளுடனும் சீனாவானது சமாதான அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நலன் பயக்கும் மூலோபாயம் போன்றவற்றைக் கட்டியெழுப்பி வருகிறது. பிராந்திய ஒருமைப்பாட்டிலும் இது பங்களிப்பை வழங்கியுள்ளது.

பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளித்தல், நிலையான சமாதானத்திற்கு பங்களிப்பை வழங்குதல், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான செழுமை போன்றவற்றுக்காக சீனாவானது பல்வேறு பயனுள்ள நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது, ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சூழலானது முற்றிலும் ஸ்திரமானதாகக் காணப்படுகிறது. இங்கு சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பலமான இயங்குவிசை காணப்படுகிறது. இது பூகோள தரையம்சத்தில் முக்கியதொரு பங்காகக் காணப்படுகிறது.

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியமான உறுப்பு நாடு என்ற வகையில், சீனா இப்பிராந்தியத்தின் எதிர்காலத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள தனது சமாதான அபிவிருத்தி தொடர்பில் முழுமையாகக் கவனம் செலுத்தியுள்ளது. சீனா தனது சொந்தப் பொறுப்பில் பிராந்திய செழுமை மற்றும் நிலைத்தன்மையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு போன்றவற்றின் ஊடாக பிராந்திய நாடுகளுடன் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சீனா தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது.

‘முதலாவதாக, நாங்கள் பொதுவான அபிவிருத்தியை அதிகரிக்க வேண்டும். அத்துடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உறுதியான பொருளாதாரத் தளத்தை இடவேண்டும். பொருளாதார நலன்களை அதிகரிப்பதானது நாடுகளுக்கு இடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமாக அமைகிறது.

அத்துடன் பல்வேறு பாதுகாப்பு விவகாரங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார ஒத்துழைப்பில் கணிசமானளவு சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் துரிதப்படுத்துவதுடன், இப்பிராந்தியத்தில் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்க வேண்டும். இதற்கும் மேலாக, முழுமையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான தொடர்பையும் பேணவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலை நிலையான அபிவிருத்தி என வரையறுக்கும் விதமாக நாம் அதனை அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாடுகளுக்கு இடையிலான குறுகிய அபிவிருத்தி இடவெளியை நீக்க முடியும். ஆகவே அனைத்து நாடுகள் மற்றும் அனைத்து சமூக மட்ட மக்களும் அபிவிருத்தியின் பங்கிலாபங்களை அனுபவிக்க முடியும். இதன்மூலம் நாடுகளின் நலன்கள் மேலும் நெருக்கமானதாக மாறிவிடும்’ என சீன அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதரப்பு நலன் பயக்கும் அனைத்துலக உறவுகள் தொடர்பான புதிய மாதிரி ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. மோதல் மற்றும் முரண்பாடுகள் அற்ற மற்றும் பரஸ்பர நலன் பயக்கும் ஒத்துழைப்பு போன்றவற்றைக் கட்டியெழுப்பும் விதமாக உலகின் அதிகாரத்துவம் மிக்க நாடுகளுடன் உறவுகள் தொடர்பில் புதியதொரு மாதிரியைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவானது அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வங் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவானது தனது முழுமையான மூலோபாய ஒத்துழைப்புக் கூட்டுப் பங்களிப்பை மேலும் ஆழமாக்குவதற்காக ரஸ்யாவுடனும், மிக நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்தியாவுடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் யப்பானுடனான தனது உறவை முன்னேற்றுவதிலும் சீனா விருப்பங் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் சீனா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இவ்விரு நாடுகளின் உறவுநிலையை வலுப்படுத்துவதுடன், முரண்பாடற்ற, மோதலற்ற, பரஸ்பர மதிப்பு மற்றும் பரஸ்பர நலன்பயக்கும் ஒத்துழைப்பு, இருதரப்பு, பிராந்திய, பூகோள விவகாரங்கள் மீதான ஒத்துழைப்பை அதிகரித்தல், பிரிவினைகளைக் கட்டுப்படுத்துதல், புதியதொரு ஆரம்ப முனையிலிருந்து மீண்டும் இருதரப்பு உறவைக் கட்டியெழுப்புதல், இதன் மூலம் இவ்விரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் உலகெங்கும் வாழும் மக்களும் நலன்களைப் பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் சீனா பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

சீன நாட்டை அபரிமிதமான வகையில் புதுப்பிக்கும் சீனாவின் கனவை உணர்த்துவதற்காக சீன மக்கள் மிகக் கடுமையாகப் பணியாற்றுகிறார்கள் என சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான பாரிய வாய்ப்புக்களை சீனா கொண்டு வரும். சீனாவின் அபிவிருத்தியானது இந்த உலகின் சமாதானத்திற்கான ஒரு நினைவுச் சின்னமாக அமையும். அயல்நாடுகளுடன் நட்பைக் கட்டியெழுப்புதல் மற்றும் கூட்டுப்பங்களிப்பை உருவாக்குதல் போன்றவற்றுக்காக சீனா உறுதியாக உழைக்கும். இதன்மூலம் சீனாவானது சுமூகமான, பாதுகாப்பான, செழுமை மிக்க அயல்நாடுகளைக் கட்டியெழுப்பும்.

இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளுடனும் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்கி, பாதுகாப்பு சார் உறுதியான மேலதிக கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பையும் உருவாக்கி, இந்தப் பிராந்தியத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக  அனைத்துலக உறவுகள் தொடர்பான புதியதொரு மாதிரியையும் கட்டியெழுப்புவது தொடர்பில் அனைத்து நாடுகளுடனும் பணியாற்றுவதற்கு சீனா தயாராக உள்ளது என சீனாவால் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிமூலம்      – The Sunday leader
ஆங்கிலத்தில் – Easwaran Rutnam
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *