மேலும்

மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

kabir hashimசிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கையை வெற்று வேட்டு என்று ஐதேக குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஐதேகவின் பொதுச்செயலரான அமைச்சர் கபீர் காசிம் கருத்து வெளியிடுகையில்,

“ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அடுத்த தேர்தல் வரை கவிழ்க்க முடியாது.

மகிந்த ராஜபக்ச இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது புதியதொரு விடயமல்ல. மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே அவர் இதனைத் தான் கூறி வந்திருக்கிறார்.

முதலில் நாட்டையும் அரசாங்கத்தையும் சபிக்கும் வகையில் தேங்காய்களை உடைக்கத் தொடங்கினார். பின்னர், ஆடசியைக் கவிழ்ப்பதற்காக பேரணிகளை நடத்தினார். இதனால் எமக்கு பாதிப்பு இல்லை.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில், அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் தனது நிலையையே பலப்படுத்திக் கொண்டார்.

18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், மக்களின் அதிகாரங்களைப் பறித்து, சில குடும்பங்களினதும்  தெரிவு செய்யப்பட்ட குழு ஒன்றினையும் வளப்படுத்தினார். எஞ்சியுள்ள நாடு நிர்க்கதியாக இருந்தது.

அதே குழு தான் இப்போது ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முயற்சிக்கிறது. அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

மக்களின் அதிகாரத்தையும், ஜனநாயகத்தையும் பலப்படுத்துவதற்கு ஐதேக பணியாற்றுகிறது.

மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள இந்த வெற்று அச்சுறுத்தல் தற்போதைய அரசாங்கத்தை எந்த வகையிலும் பாதிக்காது” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *