மேலும்

சர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா?

sri-lanka-christmas-tree-1கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில், காலிமுகத்திடலில் சுமார் 80 ஆயிரம் டொலர் செலவில் பிரமாண்ட நத்தார் மரம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நத்தார் மரம், 325 அடி உயரமுள்ளதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு வீணாகப் பணம் செலவிடப்படுவதாக கத்தோலிக்கத் திருச்சபையின், கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திடீரென இதன் கட்டுமானப் பணிகள் ஆறு நாட்கள் நிறுத்தப்பட்டன.

பின்னர் மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 24ஆம் நாள், மாலை இந்த நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டது. எனினும், முன்னர் திட்டமிட்டதைப் போன்று 325 அடி உயரம் கொண்டதாக இந்த நத்தார் மரம் அமைக்கப்படவில்லை.

sri-lanka-christmas-tree-1sri-lanka-christmas-tree-2

சில நாட்கள் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால், குறிப்பிட்ட நாளுக்குள் இந்த மரத்தின் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டவாறு முடிக்க முடியாது போனது.

இதனால் 73 மீற்றர் (238 அடி) உயரமுள்ள நத்தார் மரமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது, எனினும்  இதுவே உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் என்று உரிமை கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உலகின் மிக உயரமான செயற்கை நத்தார் மரம் என்று பதிவு செய்யப்பட்ட, மரத்தை விட இது 18 மீற்றர் (59 அடி) கூடுதல் உயரமானதாகும்.

இரும்பு குழாய்கள், பிளாஸ்டிக் வலை, போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நத்தார் மரத்தை அலங்கரிக்க, ஒரு மில்லியன் இயற்கை அன்னாசிக் கூம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு பச்சை, வெள்ளி, பொன்னிற வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஆறு இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த நத்தார் மரத்தின் உச்சியில், 6 மீற்றர் (20 அடி) உயரமுள்ள நட்சத்திரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

sri-lanka-christmas-tree-3sri-lanka-christmas-tree-4

நூற்றுக்கணக்கான துறைமுகப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் நான்கு மாதங்களாக இந்த மரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நத்தார் மரமே உலகில் மிக உயரமானது என்பதை கின்னஸ் உலக சாதனைப் பதிவு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

தற்போது, உலகின் மிக உயரமான செயற்கை நத்தார் மரம் என்ற சாதனையை சீனாவின் குவாங்சூ நகரில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட, 55 மீற்றர் ( 180 அடி) உயரமான நத்தார் மரமே பெற்றிருக்கிறது.

நல்லிணக்கத்தை நோக்காக கொண்டு இந்த நத்தார் மரம் அமைக்கப்பட்டிருந்த போதிலும், இது சர்ச்சைக்குரிய திட்டமாக இருந்ததால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதன் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த நத்தார் மரத்தை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவே இதனைத் திறந்து வைத்திருந்தார்.

அதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் சிரச ஊடகங்களின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த நத்தார் மரம் உள்ளிட்ட மின்னொளி அலங்காரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *