மேலும்

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் 95 வீதம் அரச காணிகள்

malik samarawickramaஅம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இனங்காணப்படும். ஏனைய 10 ஆயிரம் ஏக்கர் காணிகள், மொனராகல, மாத்தறை மாவட்டங்களில் ஒதுக்கப்படும்.

இந்த தேவைக்காக காடுகளோ, வனவிலங்கு பாதுகாப்பிடங்களோ பயன்படுத்தப்படாது. தனியார் காணிகள் உரிமையாளர்களின் ஒப்புதலுடன் மாத்திரம், தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டே இதற்காக பெறப்படும். சுமார் 200 வீடுகள் மாத்திரமே, இந்த திட்டத்துக்காக இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருக்கும்.

நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக காணிகள் பெறப்படுவதில் கையாளப்படும் அதே அணுகுமுறை தான் இங்கும் கையாளப்படும். 15 ஆயிரம் ஏக்கர் காணிகளும் ஒரே தடவையில் முதலீட்டாளர்களிடம் வழங்கப்படாது. மூன்று கட்டங்களாகவே நிலங்கள் வழங்கப்படும்.

இந்த பொருளாதார வலயத்தில், 2400 தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 4 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்தப் பகுதியில், இயற்கை எரிவாயு மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கப்பல்களை பழுதுபார்க்கும் தளம் என்பனவும் அமையவுள்ளன. இதன் மூலம் சிறிலங்காவுக்கு 4 பில்லியன் டொலர் முதலீடுகள் கிடைக்கும்.

நாட்டில் வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் இந்த வலயத்துக்கு மாற்றப்படும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டை இரண்டாவது தவணைக்காலத்துக்கு நீடிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *