மேலும்

ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்

vijithamuniசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொல்லப்படுவார் என்று, விஜிதமுனி ரோகண, தனது முகநூலிலும்,  சமூக வலைத்தளங்களிலும் காணொளிகளை பதிவேற்றியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மரணத்துக்குப் பின்னர் நடக்கும் அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச, தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் இன்றியே வெற்றி பெறுவார் என்றும், பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பார் என்றும் இவர் ஜோதிட எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளார்.

இவரது இந்த ஜோதிட எதிர்வுகூறல் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிடுகையில், “விஜிதமுனியி இந்தக் கருத்துக்களை அதிகாரிகள் அலட்சியம் செய்ய முடியாது. இவர் வரும் ஜனவரி 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் கொல்லப்படுவார் என்று கூறியிருக்கிறார்.

சிறிலங்கா அதிபரை படுகொலை செய்யும் பரந்துபட்ட திட்டம் ஒன்றின் அங்கமாக இந்தப் பரப்புரை அமைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தியை தாக்கிய விஜிதமுனி ரோகண, இராணுவ நீதிமன்றத்தினால் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிறிலங்கா அதிபராக இருந்த பிரேமதாச, அவரை இரண்டரை ஆண்டுகளில் பொதுமன்னிப்பு அளித்து விடுவித்தார்.

அதற்குப் பின்னர், இசை ஒலித்தட்டு விற்பனையாளராக, அரசியல்வாதியாக உலாவந்த விஜிதமுனி, தற்போது ஜோதிடராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *