மேலும்

நாரந்தனை தாக்குதல் வழக்கில் ஈபிடிபியினர் மூவருக்கு மரணதண்டனை

gavelஊர்காவற்றுறை- நாரந்தனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அணியினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரைப் படுகொலை செய்து, 18 வரையானோரைக் காயப்படுத்திய, ஈபிடிபியினர் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று இரட்டை மரணதண்டனை விதித்துள்ளது.

2001 ஆம் அண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாகன அணியை வழிமறித்து நாரந்தனையில் ஈபிடிபியினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 18 கூட்டமைப்பு பிரமுகர்களும் ஆதரவாளர்களும் படுகாயமடைந்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று யாழ். மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, குற்றவாளியாக காணப்பட்ட நெப்போலியன், மதனராசா, ஜீவன் ஈபிடிபியினர்  மூவருக்கும் இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூவருக்கும் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அபராதத்தை செலுத்தத் தவறினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிவான் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான கருணாகரகுருமூர்த்தியை குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்து யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நெப்போலியன் மற்றும் மதனராசா ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர். தற்போது பிரித்தானியாவில் தங்கியிருப்பதாக கூறப்படும் இவர்களை நாடு கடத்துமாறு அந்த நாட்டைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்துலக காவல்துறை மூலம் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *