மேலும்

பொது பலசேனாவுக்கு மட்டக்களப்பில் நுழைய தடை – நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரர்

Gnanasaraமட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவைக் கிழித்தெறிந்த, கலகொடஅத்தே ஞானசார தேரர், பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், தம்மை மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் தடுப்பது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல நேற்று மட்டக்களப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, மத ரீதியான பதற்ற நிலை ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பு காரணமாக வெலிகந்தை பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர்  அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. அப்போது, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவைக் கிழித்தெறிந்த பொது பலசேனா அமைப்பின் பொதுசெயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறிலங்கா காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

“மட்டக்களப்பு பௌத்த மக்கள் நான் போதி பூஜை நடத்த வேண்டும் என  ஆசைப்படுகிறார்கள். அதற்காக நாங்கள் செல்கிறோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் காவல்துறை அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள். ஆயுதம் ஏந்திய புலிகளை வீழ்த்தி  நிராயுதபாணியாக்கிய முப்படைகளுக்கு இதை செய்ய முடியாதா?

இது என்ன விளையாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநியாயத்தினை எமக்கு செய்ய வேண்டாம். மூளையுள்ள அதிகாரிகளின் பிரச்சினை அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழுதைகளுக்கு இது தெரியாது.

வரும் 6 ஆம் நாள் சிறிலங்கா அதிபருடன்  கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது. இதன் போது இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.

இவ்விடத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். காவல்துறை தடுத்தால் நாங்களும் வாகனங்களை விட்டு வீதியினை வழிமறித்து கொண்டு இவ்விடத்திலேயே இருப்போம்.

bbs-protest-1bbs-protest-2

bbs-protest3bbs-protest4bbs-protest5

நீதிமன்ற தடை உத்தரவினை கொழும்பில் வைத்து தந்து இருக்கலாம் தானே. நீதிமன்ற தடை உத்தரவினை கடவத்தையில் கொடுத்து இருக்கலாம் தானே, வரக்காபொல,குருணாகல்,தம்புள்ளை இடங்களில் சரி வைத்து  கொடுத்து இருக்கலாம் தானே.

அங்கு பிரபாகரனின் படத்தினை கொண்டு செல்கின்றார்கள். ஆனால் படையினர் ஒன்றும் செய்யவில்லை. சிங்களவர்களுக்கு மட்டுமே இப்படி செய்கின்றீர்கள். எங்களுடன் பிரச்சினை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம். ”என்றும் அவர் எச்சரித்தார்.

அதேவேளை, மட்டக்களப்பில் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஒரு தொகுதி சிங்கள இளைஞர்களுடன் இணைந்து மேற்கொள்ள முனைந்த பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் காவல்துறையினருக்கும், விகாராதிபதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையின் தடுப்பு அரண் மீது ஏற்றி நின்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இந்தப் போராட்டங்களினால், மட்டக்களப்பில் பதற்றமான சூழல் நேற்றுக் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *