மேலும்

புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

Champika ranawakkaபுதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படத் தேவையில்லை.

ஆனால் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும்.

அரசியல் சார்பு மற்றும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஏனைய காரணிகளால் கருத்து வாக்கெடுப்பு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது.

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட, பிரெக்சிட் கருத்து வாக்கெடுப்பு இதற்கு ஒரு உதாரணம்.

இந்த வாக்கெடுப்பினால் அரசியல் மற்றும் பொருளாதார தளம்பல் நிலை மற்றும் பிளவுகள் போன்ற தேவையற்ற பிரச்சினைகள் பிரித்தானியாவில் ஏற்பட்டன.

நாம் கருத்து வாக்கெடுப்பை நடத்தினாலும் அதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பிரிவினை அரசியல் பரப்புரைக்கு இதனைப் பயன்படுத்தக் கூடும்.

மகிந்த ராஜபக்ச  மற்றும் அவரது ஊழல் கூட்டாளிகள் இதனைத் தமது வங்குரோத்து பரப்புரைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், ஜே.ஆர். ஜெயவர்த்தனவும், கருத்து வாக்கெடுப்பை நடத்தாமல், நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டே புதிய அரசியலமைப்புகளை நடைமுறைப்படுத்தினார்கள்.

இப்போது எல்லாக் கட்சிகளுமே புதிய அரசியலமைப்பு தேவை என்று இணங்கியுள்ளன. எல்லாக் கட்சிகளும் யோசனைகளை சமர்ப்பித்துள்ளன. எனவே அனைவரதும் ஒருமித்த ஆதரவுடன் இதனை நிறைவேற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *